தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் ஆட்டை கடித்து குதறிய சிறுத்தை.. கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை திட்டம்! - leopard bit a goat - LEOPARD BIT A GOAT

Leopard bit a Goat: பாபநாசம் மலை அடிவாரப்பகுதியில் உள்ள கிராமத்தில் சிறுத்தை ஒன்று ஆட்டை வேட்டையாடி உள்ளது. இந்த நிலையில், சிறுத்தையின் இருப்பிடத்தை மோப்பநாய் மூலம் அறிந்த முதல்முறையாக கண்டறிந்த நெல்லை மாவட்ட வனத்துறையினர், கூண்டு வைத்து அதனைப் பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆட்டின் புகைப்படம்
ஆட்டின் புகைப்படம் (Credit: ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 10:08 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி, மலை அடிவாரத்தில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும், கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர்கதையாக உள்ளது.

இந்த நிலையில், மலை அடிவாரத்தில் உள்ள கிராமப் பகுதியில் சிறுத்தை ஒன்று ஆட்டை வேட்டையாடி உள்ளது. வேம்பையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சங்கர். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்த்து வரும் நிலையில், வழக்கம்போல் நேற்றிரவு ஆடுகளை கட்டிப்போட்டு விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று (மே 16) அதிகாலை ஆடு மாயமானதைப் பார்த்த சங்கர், அப்பகுதியில் கிடந்த ரத்தத்தினைப் பார்த்து, அதனை பின் தொடர்ந்து சென்று பார்த்துள்ளார். அப்போது, ஆட்டின் உடலை சிறுத்தை குதறிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து தகவலறிந்த பாபநாசம் வனச்சரகர் சத்தியவேல் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு தொடர்ந்து தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து, வனத்துறையினரின் மோப்ப நாயான நெஸ் (NEX) மூலமாக, சிறுத்தை வந்த வழியாக பின் தொடர்ந்து சென்றனர். இறுதியாக, அனவன்குடியிருப்பு பகுதியில் மோப்பம் பிடித்தபோது, அப்பகுதியிலுள்ள பொத்தை பகுதியைச் சென்றடைந்தது.

அடுத்த கட்டமாக அந்த பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், நெல்லை மாவட்ட வனத்துறை சார்பில், முதல்முறையாக வனவிலங்குகள் தேடுதல் வேட்டையில் மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, சங்கர் வீட்டில் இதேபோல் கடந்தாண்டு தீபாவளி அன்று ஆட்டை சிறுத்தை வேட்டையாடிச் சென்றது. மேலும், இது போன்று பல்வேறு மலை அடிவாரப் பகுதியில் சிறுத்தை, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. எனவே, சிறுத்தை உள்பட வனவிலங்குகளில் இருந்து நிரந்தர பாதுகாப்பு வழங்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:தோனியின் இறுதிப்போட்டி சென்னையில் நடக்க மற்ற அணிகள் என்ன செய்ய வேண்டும்? - Ipl Playoff Chances

ABOUT THE AUTHOR

...view details