தமிழ்நாடு

tamil nadu

நெல்லை நிலநடுக்கம்; பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அட்வைஸ்! - earthquake in nellai tenkasi

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்த நிலையில், இதுகுறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்
மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் (Credits - District Collector, Tirunelveli X Page)

திருநெல்வேலி :திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று பிற்பகல் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். குறிப்பாக பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் நேரடியாக நில அதிர்வை உணர்ந்ததாக தெரிவித்தனர்.

அம்பாசமுத்திரம் பகுதியில் சில இடங்களில் வீடுகளில் உள்ள பொருட்கள் தானாக குலுங்கியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான திப்பணம்பட்டி ஆவுடையானூர், மேட்டூர் அரியபுரம், வெய்க்காலிப்பட்டி போன்ற பல்வேறு இடங்களில் மக்கள் நில அதிர்வை உணர்ந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சில விளக்கங்களை அளித்துள்ளது. அதன்படி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, "அம்பாசமுத்திரம் பகுதியில் பொதுமக்களால் உணரப்பட்ட நில அதிர்வு குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் (National Centre for Seismology) மற்றும் கடலியல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (Indian National Centre for Ocean Information Services) ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டதா? நடந்தது என்ன?

அப்பகுதியில் அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலான நில அதிர்வுகள் ஏதும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரிக்டர் அளவுகோலில் 1 முதல் 3 வரையிலான லேசான நில அதிர்வுகள் ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் நடைபெறும். அவற்றில் மிகச் சிறிய அளவிலானவை இயந்திரங்களில் பதிவாகாது. இதுபோன்ற அதிர்வுகளால் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதால் அச்சம் கொள்ள தேவையில்லை என்று அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசின் உத்தரவுப்படி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை, புயல், வெள்ளம், நில அதிர்வு, நிலச்சரிவு உள்ளிட்ட அனைத்து வகை பேரிடர்கள் குறித்தும் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் கூட்டுப்பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி அருகாமை மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சி நிகழ்வுகளில் கலந்து கொண்டு பொதுமக்கள் இயற்கை பேரிடர்கள் குறித்து அறிந்து கொள்ளவும், பேரிடர்கள் தொடர்பாக முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும், பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details