திருச்சி: திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை மாத்தூர் பகுதியில், பாரதிதாசன் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைகழகத்தில் சென்னையைச் சேர்ந்த வல்லரசு (21), சேலத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (22) மற்றும் அரியலூரைச் சேர்ந்த லெனின் (21) ஆகிய மூன்று மாணவர்களும், பல்கலைக்கழக விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தனர்.
இந்த நிலையில், இவர்கள் மூவரும் இன்று (பிப்.29) அதிகாலை ஒரு இருசக்கர வாகனத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது, மாத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற லாரி, எதிர்பாராத விதமாக இவர்களின் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதில் வல்லரசு மற்றும் ரங்கநாதன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லெனின் என்பவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த மாத்தூர் காவல்துறையினர், லாரியை ஒட்டி வந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபி என்ற ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம், சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மூன்று மாணவர்களின் உடலும், பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்பு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இதையும் படிங்க:த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு விவகாரம்; மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து!