சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு துபாய் நாட்டில் இருந்து இலங்கை வழியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலாய்வுத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த விமானத்தில் வந்த 28 வயது மதிப்புடைய பயணி ஒருவர் மீது மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பயணியை பின் தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த பயணி விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு பகுதிக்கு இடையே சுமார் 10 அடி உயரம் உள்ள கண்ணாடி தடுப்பு அருகில் நீண்ட நேரமாக ஒருவித பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்துள்ளார். மேலும், புறப்பாடு பகுதியில் இலங்கைக்கு செல்வதற்காக ஆண் பயணி ஒருவர் வந்து நின்றதும் வருகைப் பகுதியில் நீண்ட நேரமாக காத்திருந்த பயணி தான் வைத்திருந்த கைப்பையில் இருந்து பந்து போன்ற உருண்டைகளை 10 அடி தடுப்பு கண்ணாடியை தாண்டி புறப்பாடு பகுதிக்குள் வீசியுள்ளார். அதனை எடுத்துக் கொண்ட இலங்கை செல்ல வந்த பயணி அந்த பந்துகளை சென்னை விமான நிலைய ஒப்பந்த ஊழியர் ஒருவரிடம் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவங்கள் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருந்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், இரண்டு பயணிகள் மற்றும் விமான நிலைய ஒப்பந்த ஊழியர் என மூன்று பேரையும் பிடித்து தனி அறைக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.