திருப்பத்தூர்: திருப்பத்தூரில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பத்தூரில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண்ணிற்கு திருமணமாகி 10 வருடங்களாகும் நிலையில், கடந்த டிசம்பர் 8ஆம் தேதி அவரது கணவர் பெங்களூருக்கு வேலைக்குச் சென்றுள்ளதும், இவர் தனியாக வீட்டில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரது தொலைப்பேசி எண்ணை கொண்டு விசாரணை செய்ததில், அவருக்கு இரண்டு தொலைப்பேசி எண்ணில் இருந்து அடிக்கடி அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருமணத்தை மீறிய உறவு: தொலைப்பேசி எண்ணின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (29) மற்றும் குமரேசன் (32) ஆகியோரை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், உயிரிழந்த பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த குமரேசனும் கடந்த 7 வருடங்களாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாகவும், இதற்கிடையில் குமரேசன் சிங்கப்பூருக்கு சென்ற நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் அந்த பெண் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ரிசார்ட்டில் மாயமான மணப்பெண் நகைகள்.., பெண்ணுக்கு திருநங்கை பாலியல் தொல்லை.. சென்னை க்ரைம்..!
இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக சிங்கப்பூருக்குச் சென்ற குமரேசன் ஊருக்கு திரும்பிய நிலையில், இவருக்கும் விக்னேஷ்க்கும் இடையில் உள்ள உறவு குறித்து தெரியவந்துள்ளது. இதனால், அந்த பெண்ணிற்கும், குமரேசனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த குமரேசன், வலுக்கட்டாயமாக அந்த பெண்ணிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட முயன்றுள்ளார்.
விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்: அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால், அந்த பெண்ணுக்கும், குமரேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த குமரேசன் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். தொடர்ந்து, அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதில் அவர் மயக்கமடைந்த நிலையில், குமரேசன் அங்கிருந்து சென்றுள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த விக்னேஷ் மயக்க நிலையில் இருந்த பெண்ணை மீண்டும் வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல்களை விசாரணையில் குமரேசன் மற்றும் விக்னேஷ் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இருவர் கைது: இதனையடுத்து, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குமரேசன் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.