சென்னை:தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக தந்தை, இரண்டு மகன்கள் உள்ளிட்ட மூன்று பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக, கைதான மூன்று பேரும் பல வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஹிஜிபுதாகிர் அமைப்பின் மூலமாக உலகளாவிய காலிபெட் கொள்கை முறையை ஷரியா சட்டத்தின் அடிப்படையில் கொண்டு வர முயற்சித்ததாக தகவல் கிடைத்துள்ளது.
குறிப்பாக, கைதானவர்கள் பொறியாளர் அமீர் உசேன் என்பவரும், அவரது தந்தை மன்சூர் மற்றும் சகோதரர் அப்துல் ரகுமான் ஆவர். சென்னையில் முதன்முறையாக இது போன்ற சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
குறிப்பாக, இவர்கள் அந்த அமைப்பின் கருத்தியலை பரப்புவதை முக்கிய பணியாக செய்து வருவது தெரிய வந்துள்ளது. அமீர் ஹுசைன் யூடியூப்களில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதிலும், பொதுத் தேர்தலுக்கு எதிரான கொள்கையைக் கொண்டிருக்கிற காரணத்தினால், அதற்கு ஏற்றார்போல் பல்வேறு கருத்துக்களை மக்களிடம் பரப்பி வருவதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இந்த அமைப்பின் கொள்கைப்படி ஜனநாயகத்தின் நம்பிக்கை இல்லாமல் காலிபெட் கொள்கை முறையில் மக்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக, தற்போது நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்களிக்கக் கூடாது என பரப்புரை மேற்கொண்டு வந்ததாக தகவல் தெரிகிறது. மேலும், வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கூட்டங்கள் நடத்துவதும், குறிப்பிட்ட நபர்களை மட்டும் அழைத்து பூட்டப்பட்ட அறைக்குள் கூட்டங்களை நடத்தியதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜானி ஜான்கான் தெருவில் 'Modern essentials education trust' என்ற அமைப்பை நடத்தி வந்ததாகவும், அங்கு அதிகளவு கூட்டங்களை நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வாரம் நடத்தப்பட்ட கூட்டங்களில் ஆட்கள் அதிகமாகிக் கொண்டே சென்று இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர். தற்போது இவர்கள் பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டு வருவதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மூவர் மீதும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். மேலும், இவர்களுடன் தொடர்பில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்தும், இதற்கு நிதி எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:கடலில் மூழ்கி பள்ளி மாணவனும், மாணவியும் தற்கொலை முதல் ஆந்திரா திருட்டு கும்பல் பிடிபட்டது வரை - சென்னை குற்றச் செய்திகள்!