சென்னை:சென்னை முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதன்படி, மதுரவாயல் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று (வியாழக்கிழமை) ஜீசஸ் கால்ஸ் சர்வீஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கார் ஒன்றில் வந்த மூன்று பேரை நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில்களைக் கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களின் காரை சோதனை செய்ததில், 55 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போதைப்பொருளுடன் சேர்த்து ஒரு செல்போன் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், கடத்தலில் ஈடுபட்ட கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (21), சைதாப்பேட்டையைச் சேர்ந்த அஜய் (20), விழுப்புரத்தைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் (24) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இதுபோன்று வேறு யாரேனும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார்களா என தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மிளகாய்ப்பொடி தூவி 5 பேர் தப்பியோட்டம்.. குன்றத்தூர் மறுவாழ்வு மையத்தில் அதிர்ச்சி! - Kundrathur Rehabilitation Center