திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே 150 ஏக்கரில் அமைந்துள்ள கிளியூர் ஏரி, வெளிநாட்டு புலம் பெயர்ந்த பறவைகள் மற்றும் உள்நாட்டு பறவைகள் வந்து தங்கும் முக்கிய இடமாக திகழ்கிறது. உலகெங்கிலும் உள்ள 160க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த 25,000 பறவைகள் ஆண்டுதோறும் இந்த ஏரிக்கு வருகின்றன.
அவற்றில் வடக்கு ஷோவலர், கார்கேனி, வடக்கு பின்டெயில், காட்டன் பிக்மி கூஸ், பார்-ஹெட் வாத்து, வெஸ்டர்ன் மார்ஷ் ஹாரியர் மற்றும் ஆஸ்ப்ரே ஆகியவை அடங்கும். இந்தப் பறவைகள், ஐரோப்பா, ஆசியா, சைபீரியா மற்றும் ரஷ்யாவை உள்ளடக்கிய பாலேர்டிக் பகுதியில் இருந்து, கடுமையான குளிர்காலத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், கிளியூர் ஏரியில் தஞ்சம் அடைவதற்காகவும் இடம் பெயர்வதாக கூறுகின்றனர்.
இந்தியாவின் 554 முக்கியமான பறவைகள் மற்றும் பல்லுயிர்ப் பகுதிகளில் (IBA) ஒன்றாக கிளியூர் ஏரி விளங்குகிறது, புலம்பெயர்ந்த பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த திருச்சி கிளியூர் ஏரியில் ஆசிய ஓபன்பில், பளபளப்பான ஐபிஸ், இந்தியன் கார்மோரண்ட், இந்தியன் ஸ்பாட்-பில்ட் வாத்து, ஓரியண்டல் டார்டர், ஃபெசண்ட்-டெயில்ட் ஜக்கானா, லிட்டில் எக்ரெட், இந்தியன் பாண்ட்-ஹெரான் போன்ற உள்நாட்டு பறவைகளும் காணப்படுகின்றன.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சுற்றுச்சூழல் அறிவியல் மாணவர்கள், இந்த ஏரியில் வந்து தங்கும் பறவைகளை கண்காணிப்பதிலும், கணக்கெடுப்பதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிளியூர் ஏரியில் பறவைகளின் செயல்பாடுகள் இனப்பெருக்கம் உள்ளிட்டவற்றை இந்த மாணவர்கள் கண்காணித்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வைகை ஆற்றுக்குள் சிக்கிய அரிய வகை பறவை.. சாதுர்யமாக காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு!
இது குறித்து திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை உதவி பேராசிரியர் கார்ல்டன் கூறுகையில், "கிளியூர் ஏரி, திருச்சியில் முக்கிய இடமாக இருந்து வருகிறது. ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால் கிளியூர் கிராமத்தை சுற்றியுள்ள ஏரிகள், காவேரி ஆறு, கொள்ளிடம் ஆறு, இருப்பதால் கிளியூர் ஏரிக்கு ஏராளமான பறவைகள் வருகை புரிகின்றன என்பது தெரிகிறது.
மிதமான குளிர்காலம் மற்றும் மிதமான வெப்பநிலையால் வகைப்படுத்தப்படும் திருச்சியின் தட்பவெப்பநிலை, புலம்பெயர்ந்த பறவைகளுக்கு சிறந்த புகலிடமாக உள்ளது. இப்பகுதியின் வெப்ப மண்டல வறண்ட காலநிலை, குளிர்கால மாதங்களில் குறைந்த மழைப்பொழிவுடன், பறவைகள் தங்குவதற்கும், தீவனம் தேடுவதற்கும் மற்றும் ஆற்றல் இருப்புக்களை நிரப்புவதற்கும் உகந்த சூழலை உறுதி செய்கிறது.
இந்த சாதகமான காலநிலை, கிளியூர் ஏரியின் ஏராளமான நீர் மற்றும் உணவு வளங்களுடன் இணைந்து, திருச்சியை புலம்பெயர்ந்த பறவைகளின் கவர்ச்சிகரமான இடமாக மாற்றுகிறது. எனவே, இந்த ஏரியை தமிழக அரசு பறவைகள் சரணாலயமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
மேலும், சுற்றுச்சூழல் அறிவியல் மாணவர் மற்றும் பறவை கண்காணிப்பாளர் ஜி.கோபி கூறியபோது, "கிளியூர் ஏரியில் பறவைகள் வருகை மற்றும் வாழ்க்கை சூழல் ஆகியவற்றை கண்காணித்து பதிவு செய்கிறோம். இயல்பான காலநிலை மட்டுமின்றி, இடப்பெயர்ச்சி காலங்களிலும் ஏராளமான பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. 26 ஆயிரம் பறவைகள் வரை இங்கு வந்து செல்வதாக பதிவு செய்திருக்கிறோம்.
அதிலும் குறிப்பாக அரிய வகை பறவைகள் ஒரே நேரத்தில் 6,000 பறவைகள் வரை இங்கு வந்து செல்கின்றன. கல்லணை போன்ற நீர் நிலைகள், விவசாய நிலங்கள் அதிகம் இருப்பதால், இங்கு ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன. இதனை சரணாலய பகுதியாக்கினால், பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க முடியும். வெளிநாட்டு பறவைகள் வருகையும் அதிகரிக்கும். வனத்துறையிடம் அதற்கான அறிக்கை தயார் செய்து கொடுத்திருக்கிறோம்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்