சென்னை: நேற்று (நவ.25) மற்றும் இன்றை தின (நவ.26) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிகழ்வுகள் குறித்து திமுக தரப்பில் இருந்து செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பொங்கல் பண்டிகையன்று சிஏ தேர்வு திட்டமிடப்பட்டதை எதிர்த்து, திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒத்திவைப்பு தீர்மானம் குறித்தும், திமுகவின் நாடாளுமன்ற செயல்திட்டக் கூட்டம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
திமுகவின் ஒத்திவைப்பு தீர்மானம்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையன்று சிஏ தேர்வு திட்டமிடப்பட்டதை எதிர்த்து, திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (நவ.25) ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை கனிமொழி தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது இந்த தேர்வு ஜனவரி 14ஆம் தேதியில் இருந்து 16ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து கனிமொழி, "நமது கலாச்சார விழுமியங்களை மத்திய அரசு மீண்டும் மீண்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
திமுகவின் நாடாளுமன்ற செயல்திட்டக் கூட்டம்: டெல்லி அண்ணா- கலைஞர் அறிவாலயத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பான திமுகவின் செயல்திட்டம் குறித்த கூட்டம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தலைமையில் இன்று (நவ.26) நடைபெற்றது. இதில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்ட திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்டு கலந்துரையாடினர்.
Today, during the DMK Parliamentary Party meeting held ahead of the Winter Session 2024 at Anna-Kalaignar Arivalayam in Delhi.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 26, 2024
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் 2024 தொடங்கியுள்ளதையொட்டி, டெல்லியில் உள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற, தி.மு.க நாடாளுமன்ற… pic.twitter.com/uN2hHWxuJ9
இதையும் படிங்க: அரசியல் சாசன தினம்; "புதிய இந்தியாவுக்கான கனவுகளை நனவாக்க உழைப்போம்" - மநீம தலைவர் கமல்ஹாசன் அறிக்கை!
வக்பு சட்டத் திருத்த மசோதா ஆய்விற்கு காலநீட்டிப்பு வழங்க கோரிக்கை: வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்குக் காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என்று ஆ.ராசா, எம்.எம்.அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (நவ.26), மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா-விடம் கடிதம் அளித்துள்ளனர்.
இ.எஸ்.ஐ மருத்துவமனை குறித்த கோரிக்கைக்கு ஒப்புதல்: திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் நாடாளுமன்ற மக்களவை திமுக குழுவின் தலைவருமான டி.ஆர்.பாலு, மக்களவைக் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று (நவ.25) திருப்பெரும்புதூரில் மத்திய அரசின் இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைப்பது தாமதமாவதன் காரணத்தை கேட்டு கேள்வி எழுப்பி, மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இ.எஸ்.ஐ. மருத்துவமனையை திருப்பெரும்புதூரில் அமைக்க மத்திய அரசும், தொழிலாளர் காப்பீட்டு நிறுவனமும் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
திமுக உறுப்பினர்கள் அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு: நாடாளுமன்ற மைய மண்டபத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் இந்திய அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு அரசியல் சாசன உறுதி மொழி ஏற்றனர். இவ்வாறாக திமுக தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்