தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் 'ஆரஞ்சு அலர்ட்' விடுத்துள்ளதால் பொதுமக்கள் முன்னச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.ி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காற்று, மழை மற்றும் இடி, மின்னலின்போது மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் பொதுமக்கள் செல்லக்கூடாது. மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகே செல்வதோ, தொட முயற்சிப்பதோ கூடாது. அதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் மின்வாரிய அலுவலர் வரும்வரை வேறு யாரேனும் அந்த மின்கம்பிகளை தொடாமலும், அதனருகில் செல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மின் மாற்றிகள், மின் பகிர்வு பெட்டிகள் மற்றும் மின் கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கி இருக்கும்போது, அதன் அருகே பொதுமக்கள் செல்லக்கூடாது. மழைக் காலத்தில் குழந்தைகளை தனியாக வீட்டை விட்டு வெளியே விளையாட அனுமதிக்க வேண்டாம். இடி, மின்னலின்போது வெட்ட வெளியிலோ, மரங்களுக்கு அடியிலோ, மின் கம்பங்களுக்கு அடியிலோ நிற்கக்கூடாது. பாதுகாப்பான கான்கிரீட் கூரை கட்டிடங்களில் நில்லுங்கள்.
மேலும் மழையின்போது தொலைக்காட்சி, மிக்சி, கிரைண்டர், கணினி உள்ளிட்ட மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். தொலைப்பேசி பயன்படுத்துவதையும் தவிர்க்கலாம். வீடுகளில் உள்ள சுவர்களில் நீர் கசிவு இருந்தால், அந்த பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.