தூத்துக்குடி: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட போல்பேட்டை பகுதியில் உள்ள தங்கம்மாள்புரம் நினைவு மேல்நிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய போதே மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தனது வாக்கினை பதிவு செய்ய வந்திருந்தார். அப்போது, அதிமுக வேட்பாளரின் பூத் ஏஜென்ட் ஒருவர் அதிமுக வேட்பாளரின் முகம் மற்றும் சின்னம் அடங்கிய மாதிரி வாக்குப்பதிவு அட்டவணையை வைத்திருந்துள்ளார்.
இதனைக் கண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, உடனடியாக தேர்தல் பணிகளில் இருந்த அதிகாரிகளிடம் கூறி அதை அப்புறப்படுத்துமாறு கூறினார். அதன் பின்னர் தேர்தல் அதிகாரி பூத் ஏஜென்ட் வைத்திருந்த மாதிரி வாக்குப்பதிவு அட்டவணையை கைப்பற்றி அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் போல்பேட்டை பகுதி வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் காலைமுதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியதால் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் வாக்குவாதம் ஏற்படுகிறது.
நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் இன்று நடைபெறுகிறது. அந்தவகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் தங்கள் ஜனநாயக கடைமையை செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:"பணம் கொடுத்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்" - வாக்களித்த பின் அண்ணாமலை சவால்!