தூத்துக்குடி:தமிகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
இந்த நிலையில், உமரிக்காடு பகுதியைச் சேர்ந்த 35 வயதான எம்.டெக், எம்.பி.ஏ பட்டதாரியான சிவனேஸ்வரன், சுயேட்சை வேட்பாளராக, மனுவை இன்று தாக்கல் செய்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதியிடம் மனுவை அளித்த இவர், சென்னையில் உள்ள தனியார் உணவு நிறுவனத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.
மூன்றாவது முறையாக, யாருடைய உதவியும் இல்லாமல் தனித்து களம் காணும் சிவனேஸ்வரன், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம், உமரிக்காடு பகுதியைச் சேர்ந்த நான், மூன்றாவது முறையாக தேர்தலில் நிற்கிறேன். முதல் முறையாக 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் நின்று 5 ஆயிரத்து 252 ஓட்டு வாங்கினேன்.
அதன்பின், இரண்டாவது முறையாக தூத்துக்குடி சட்டமன்றத் தேர்தலில் நின்று 2 ஆயிரத்து 861 ஓட்டு வாங்கியுள்ளேன். 3வது முறையாக மீண்டும் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளேன். அரசியலில் நிற்பதற்கு காரணம், படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற முக்கியமான நோக்கம் தான்.