தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள செட்டிக்குறிச்சி ஊராட்சி, வடக்கு கோனார் கோட்டையில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இந்த காலனியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட 31 வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கக்கூடிய மக்கள் விவசாயப் பணிகள் மற்றும் கூலித் தொழில் உள்ளிட்டவற்றைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்த நிலையில் எப்போதும் வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் உள்ளதாக காலனிவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், இது குறித்து பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, "கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு இந்த வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. ஆனால் வருடங்கள் பல கடந்தும் இதுவரை எந்த ஒரு சீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால் வீடுகள் அனைத்தும் முற்றிலுமாக சேதமடைந்து காணப்படுகிறது.
குறிப்பாக, வீட்டின் மேற்கூரை பகுதி பெயர்ந்து கம்பிகள் அனைத்தும் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி, அவ்வப்போது வீட்டின் சுவர்கள் பெயர்ந்து விழுவதால் இரவில் தூங்குவதற்கே அச்சமாக உள்ளது. இதனால் இங்குள்ள பலர் தெருக்களில் தூங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.