தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: சென்னையில் யாத்திரை நடத்த அனுமதி கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு! - MASDURAI THIRUPARANKUNDRAM ISSUE

சகோதர்களாக வாழ்ந்து வரும் இந்து இஸ்லாமியர்களிடையே பிரச்சனையை ஏற்படுத்த சில சமூக விரோதிகள் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சென்னை உயர் நீதிமன்றம் ( கோப்புப்படம்)
நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சென்னை உயர் நீதிமன்றம் ( கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2025, 9:56 PM IST

சென்னை: பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணை தலைவர் எஸ். யுவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், 'மதுரை மாவட்டத்தில் இருக்ககூடிய திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று இஸ்லாமியர்கள் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பிரச்சனை செய்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானின் மலை. அந்த மலையை காக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோயில் வரை கையில் வேல் ஏந்தி பேரணி நடத்த காவல் துறைக்கு மனு அளித்தும் அனுமதியளிக்கவில்லை என்பதால், பிப்ரவரி 18ம் தேதி யாத்திரைக்கு அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்' என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் இஸ்லாமியர்களுக்கு சொந்தம்: இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளைந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், 'இந்து முன்ணணி போராட்டம் நடத்த அனுமதி வழங்கிய நீதிமன்றம், மத கலவரங்களை தூண்டும் வகையில் முழக்கங்களை எழுப்பக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதித்தது. ஆனால், உத்தரவை மீறி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முழக்கங்கள் எழுப்பியவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1931ம் ஆண்டு மதுரை நீதிமன்றம், நெல்லித்தோப்பு, சிக்கந்தர் தர்கா, கொடிமரம், மலையேறும் வழிப்பாதை அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என தீர்ப்பிளித்துள்ளது. அந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றம், ப்ரிவியூ கவுன்சில் ஆகியவை மதுரை சப் கோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்தது.

எனவே, இஸ்லாமியர்கள் அவர்களுடைய இடத்தில் வேண்டுதலுக்காக ஆடு மற்றும் கோழி பலியிட்டு படைத்து உண்ணுவது இதுவரை வழக்கமாக உள்ளது என்ற ஆர்.டி.ஓ அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சி தலைவரும் இந்த பழக்கம் நடைமுறையில் உள்ளதாக அரசுக்கு தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள கோயில்களில் கூட பிராணிகளை பலியிடுவது வழக்கமாக உள்ளது என்றும், உதாரணத்திற்கு மேலூர் வட்டம், அழகர் கோயில், 18ம் படி கருப்பச்சாமி திருக்கோயில், மதுரை கிழக்கு வட்டம், பாண்டிமுனிஸீவரர் கோயில், வளையாங்குளம் மலையாண்டி கருப்பச்சாமி திருக்கோயில், கிராமங்களில் உள்ள எல்லை காவல் தெய்வங்கள் உள்ளிட்டவற்றில் இந்த நடைமுறை தொடர்கிறது.

சமூக விரோதிகள் சதி:மேலும், மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் என்ற பெயரில் பிராணிகளை பலியிட்டு தர்காவில் சமபந்தி விருந்திற்கு அழைப்பு விடுப்பதாக சமூக விரோதிகள் பொய்யான பதிவினை வெளியிட்டுள்ளார்கள் என்றும், இது சம்பந்தமாக மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது. மத நல்லிணக்கத்தை கெடுக்கும் விதத்தில் சமூக விரோதிகள் திட்டமிட்டு இச்செயல்களை செய்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மக்கள் இந்து, முஸ்லீம் மற்றும் ஜெயின் என்ற மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். மதத்தால் மற்றும் இனத்தால் என்றென்றும் தமிழ்நாடு மக்கள் ஒரே குடும்பத்தினராக தொன்று தொட்டு வாழ்ந்து வருகின்றனர். இந்துக்களும் முஸ்லீம்களும் சகோதர சகோதரிகளாகவே இன்று வரை வாழ்ந்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் மலையை ஓர் காரணமாக்கி இஸ்லாமியர்களிடையே தேவையற்ற கலவரங்களை உருவாக்கி மக்களின் ஒற்றுமை குலைந்து விடக்கூடாது. தமிழ்நாட்டில் கோயில் நகரமாக அழைக்கப்படும் மதுரை மத நல்லிணத்திற்கு பெயர் பெற்ற புனித தலமாகும். கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள சுல்தான் அலாவுதீன் தர்காவில் இன்று வரை இந்து மதத்தை சேர்ந்த செங்குன்ற முதலியார் சமூக மக்களால் வழங்கப்படும் கொடிதான் ஏற்றப்படுகிறது.

இந்து- இஸ்லாமிய சகோதரத்துவம்:சமீபத்தில் கூட, மதுரைக்கு அருகிலுள்ள காரைக்குடியில் உள்ள ஒரு இந்து கோயில் கும்பாபிஷேகத்திற்கு முஸ்லீம் மதத்தினர் சீர்வரிசை, நன்கொடை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முஸ்லீம் சமுதாயத்தினர் விநாயக சதுர்த்தி விழாவினை கொண்டாடி ஏறக்குறைய ஆயிரம் இந்து சமுதாயத்திற்கு அன்னதானம் வழங்கினார்கள்.

திருப்பூர் ஒத்தப்பாளையம் கிராமத்தில் முஸ்லீம் சமுதாயத்தினர் ஒரு விநாயகர் கோயில் அமைக்க 3 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியதோடு அக்கோயில் குடமுழுக்கு விழாவில் இரு சமுதாயத்தினரும் ஒன்றாக பங்குக் கொண்டு சிறப்பாக விழா நடத்தினார்கள். நாகூர் தர்கா கந்தூரி விழாவில் போத்தப்படுகின்ற போர்வை பழனியாண்டி பிள்ளை பரம்பரையிலிருந்து தான் இன்று வரை வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு மத நல்லிணத்திற்கும், சமூக ஒற்றுமைக்கும் பெயர்பெற்றது. மத நல்லிணக்கத்தை காப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. ஒவ்வொருவரின் மத நம்பிக்கையை பாதுகாப்பதுடன் யாருடைய மத வழிபாட்டிலும் தலையிடவும் தடுக்கவும் மாட்டோம். மத வேறுபாடின்றி ஒரே சமுதாயமாக மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும்.' என்று அரசு தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பேரணி நடத்த அனுமதி கேட்டுள்ள இடம் மிகுந்த கூட்ட நெரிசல் மிகுந்தது என்பதால் வேறு இடத்தை தேர்வு செய்து தெரிவிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details