மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் குருமுதல்வரின் குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் உள்ள 1500 ஆண்டுகள் பழமையான ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோயில் வைகாசி மாத பெருவிழா 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இத்திருக்கோயில்களில் 10 நாட்கள் நடத்தப்படும் உற்சவங்களில் நான்காம் நாள் திருவிழாவாக திருமுறைகளை வீதி உலா எடுத்துச் செல்வது வழக்கம். மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் கடைசியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் தருமபுரம் ஆதீனம் 25-வது குருமகா சந்நிதானம் அருளாட்சி காலத்தில் 5 யானைகளின் மீதேறி திருமுறை வீதியுலா நடைபெற்ற குறிப்புகள் காணப்படுகின்றன.
அதன்பின்னர், சில காரணங்களால் இந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. நடப்பாண்டு ஞானபுரீஸ்வரர் பெருவிழா ஞானபுரீசுவரர் கோயிலில் மே 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் நான்காம் நாள் திருவிழாவான யானை மீதேறி திருமுறை வீதியுலா நிகழ்ச்சி 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட்டது.