அரியலூர்: 18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது. இதில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விசிக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 5,05,084 வாக்குகள் பெற்று1,03,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு மூன்றாவது முறையாக பெறும் வெற்றியாகும்.
இவர் திமுக கூட்டணியில் விசிகவின் பானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தார். சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆனி மேரி ஸ்வர்ணா வெற்றி சான்றிதழை, தொல்.திருமாவளவனிடம் வழங்கினார்.
பின்னர் வாக்கு எண்ணும் மைத்திற்கு வெளிய செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 'இந்திய அளவில் நானூறு இடங்களை வெல்வோம் என்று கூறிய மோடி தலைமையிலான அரசு தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இது சங்பரிவார் அமைப்பிற்கும், பொதுமக்களுக்கும் இடையே நடைபெற்ற போர். இந்த போரில் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இது சங்பரிவார் அமைப்புக்கும் மோடிக்கும் பின்னடைவு. இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு ஆதரவு வழங்கி, காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க உதவ வேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
மேலும், தற்பொழுது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றதன் மூலம், அங்கீகாரம் பெற்ற கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு அடுத்தார் போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்வாகியுள்ளது.