தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜய் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது ஏன்? - திருமாவளவன் விளக்கம்! - THIRUMAVALAVAN

"திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும், விரிசலை உருவாக்குவதும் தான் நோக்கம்" என விஜய் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது குறித்து செய்தியை பரப்பிய தனியார் நாளேடுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜய், திருமாவளவன்
விஜய், திருமாவளவன் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2024, 1:18 PM IST

சென்னை: "யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்!.. பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்!" என விஜய் பங்கேற்கும் “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழாவை தவிர்த்தது ஏன்? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும், கூட்டணியில் விரிசலை உருவாக்குவதும் தான் அதன் உள்நோக்கமாக இருக்க முடியும் என ஒரு நாளிதழை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” - இது புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து விகடன் பதிப்பகம் வெளியிடும் நூல். ஆதவ் அர்ஜூனின் 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்னும் தேர்தல் உத்திகளை வகுக்கும் தன்னார்வ அமைப்பும் இதன் இணை வெளியீட்டு நிறுவனமாகும். இது புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளான இன்று (டிச-06) சென்னையில் வெளியிடப்படுகிறது.

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது ஏன்?

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கார் புத்தக வெளியீட்டு நிகழ்வு அழைப்பிதழ் (X / @AadhavArjuna)

முப்பத்தாறு பேரின் கட்டுரைகள் தொகுக்கப் பெற்று இந்நூல் வெளிவருகிறது. இதில், என்னுடைய நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. இந்நூலின் வெளியீட்டுவிழா கடந்த ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்தநாளில் நடைபெறுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிடுவதாகவும், நான் பெற்றுக்கொள்வதாகவும் சொல்லப்பட்டது. அந்நிகழ்வில் ஆங்கில 'இந்து இதழின்' ஆசிரியர் இராம், மும்பையிலிருந்த ஆனந்த்டெல்டும்டே ஆகியோர் பங்கேற்கவிருப்பதாகத் திட்டம் இருந்தது.

ஆனால், அந்நிகழ்வு திட்டமிட்டவாறு நடைபெறாமல் தள்ளிப்போனது. சில மாதங்களுக்குப் பின்னர் முதலமைச்சர் பங்கேற்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், ராகுல்காந்தியை அழைப்பதற்கு மேற்கொண்ட முயற்சியும்கூட நிறைவேறவில்லை என்றும் தகவல்கள் கிடைத்தன. அதன்பின்னர், நடிகர் விஜய் பங்கேற்க இசைவளித்துள்ளார் என சொல்லப்பட்டது. அவரது கட்சியின் விக்கிரவாண்டி மாநாடு நடைபெறுவதற்கு முன்பு அவ்வாறு சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பேத்காரிடம் இருந்து விஜய் புத்தகம் பெறுவது போன்ற சித்தரிக்கப்பட்ட படம் (X / @AadhavArjuna)

அத்துடன், இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலும் அழைப்பிதழ் அச்சிடப்படாமலும் இருந்த சூழலாகும். நடிகர் விஜய் இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் என்பது ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட எங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், திடுமென ஒரு தமிழ் நாளேடு இதனை பெரிய செய்தியாக - தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. விஜயின் கட்சி மாநாட்டுக்குப் பிறகு அவ்வாறு வெளியிட்டது.

அதாவது, "டிச-06, விஜய் - திருமா ஒரே மேடையில்" என தலைப்புச் செய்தி வெளியிட்டு, ஒரு நூல் வெளியீட்டு விழாவைப் பூதாகரப்படுத்தி அந்நாளேடு அதனை அரசியலாக்கியது. இதுதான் அவ்விழாவைப் பற்றிய 'எதிரும் புதிருமான' உரையாடல்களுக்கு வழிவகுத்தது. பல்வேறு யூகங்களுக்கும் இடமளித்தது. குறிப்பாக, மரபு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவை கூட்டணி தொடர்பான உரையாடல்களாக அரங்கேறின.

திட்டமிட்டு அரசியல் சாயம் பூசியது ஏன்?:

ஒரு நூல்வெளியீட்டு விழாவாக, அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறியிருக்க வேண்டிய நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசியது அந்த நாளேடு தான். அது ஏன்? அந்த நாளேட்டுக்கு அந்தத் தகவல் எப்படி கிடைத்தது? அதாவது, விகடன் பதிப்பகத்தில் ஒரு சிலருக்கும், 'விஓசி' நிறுவனத்தில் ஓரிருவருக்கும், அடுத்து எனக்கும் மட்டுமே அப்போதைக்குத் தெரிந்திருந்த அச்செய்தி, எப்படி அந்த நாளேட்டின் கவனத்துக்குப் போனது?

இதையும் படிங்க:"திமுகவுக்கு எதிரான விமர்சனத்தில் நமக்கு கவலை இல்லை" - மாவீரர் நாளில் திருமாவளவன் பேச்சு!

அதிகாரப்பூர்வமாக விகடன் பதிப்பகமோ, விஓசி நிறுவனமோ உறுதிப்படுத்தாத ஒரு செய்தியை அந்த நாளேடு ஏன் பூதாகரப்படுத்தியது? அதற்கு ஏன் திட்டமிட்டு அரசியல் சாயம் பூசியது? கடந்த முப்பந்தைந்து ஆண்டுகளில் விடுதலைச் சிறுத்தைகளையோ, திருமாவளவனையோ ஒரு பொருட்டாகவேக் கருதாத அந்த நாளேடு, திடுமென தலைப்புச் செய்தியில் எனது பெயரைப் பதிவு செய்திருக்கிறது என்றால் அதன் உள்நோக்கம் என்ன?

கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி:

என்னைப் பற்றியும் விசிக பற்றியும் எதிர்மறையாக மட்டுமே செய்திகள் வெளியிடுவதைத் தனது தார்மீகக் கடமையாகக் கருதி தொடர்ந்து செயல்பட்டுவரும் அந்த நாளேட்டுக்குத் திடீரென என்மீது நல்லெண்ணக் கரிசனம் எங்கிருந்து வந்தது? அந்த நாளேட்டின் அத்தகைய செயற்பாட்டில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்பது "உள்ளங்கை நெல்லிக்கனி" போல தெற்றெனத் தெரிகிறது.

அந்த நாளேட்டு நிறுவனத்துக்கு அப்படி என்ன உள்நோக்கம் இருக்க முடியும்? இவ்வினா எழுவது இயல்பேயாகும். திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையிலுள்ள நட்புறவில் அய்யத்தைக் கிளப்பி, கருத்து முரண்களை எழுப்பி, திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அதன் மூலம் கூட்டணியில் விரிசலை உருவாக்குவதும் தான் அதன் உள்நோக்கமாக இருக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details