சென்னை:சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில், ரோட்டரி கிளப் சங்கத்துடன் இணைந்து 10,000 பயனாளிகள் பயனடையும் செயற்கை சிறுநீரக சுத்திகரிப்பு மருத்துவ உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மருத்துவக் காப்பீட்டு திட்டம் மிகச் சிறப்பான வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,500 கோடிக்கு மேல் அரசாங்கம் தந்து, இன்று ஒன்றிய அரசின் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அமைப்பு சார்பில் இந்த காப்பீட்டு திட்டம் என்பது ஏறத்தாழ ஒரு கோடியே 44 லட்சம் குடும்பங்களைக் கொண்ட மிகப்பெரிய அமைப்பாக இருந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 15 லட்சத்து 70 ஆயிரத்து 322 சர்க்கரை நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர். கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இதுவரை 3 லட்சத்து 13 ஆயிரத்து 864 புறநோயாளிகள் பயனடைந்துள்ளனர்.
குரங்கம்மை பாதிப்பு: உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது, ஒன்றிய மருத்துவத்துறை அமைச்சர் நட்டா, இந்தியாவில் குரங்கம்மை இல்லை என்று அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை, தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு ஆடைகள் தவிர்த்து, தெரிகிற உடல் பகுதியில், முகம் போன்ற பகுதியில் குரங்கம்மை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கிறார்கள்.
யாருக்காவது அந்த பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள், நாளை மறுநாள் நான் நேரடியாக விமான நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளேன்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் செய்த சாதனையே தெரிந்து வைத்திருக்கவில்லை. அம்மா கிளினிக் இருந்தது, அம்மா மருந்தகம் என்று இல்லை. அம்மா உப்பு கடை என்று வைத்திருந்தார்கள். ஒன்றிய அரசின் மக்கள் மருந்தகம் தமிழ்நாட்டில் 800க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது.
அம்மா மருந்தகம் என்று எந்த காலத்திலும் வைக்கவில்லை. ஜெயக்குமார் எந்த நினைப்பில் சொல்கிறார் என்று தெரியவில்லை. அம்மா கிளினிக் பெரிய கட்டமைப்போடு விளங்கியது போலவும், நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் அந்த மருத்துவமனையில் வேலை செய்தது போலவும், அம்மா கிளினிக் மூடிவிட்டதால் தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு சிதைந்ததைப் போல எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அம்மா கிளினிக்கிற்கும், அம்மா மருந்தகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அவர்கள் காலத்தில் வந்தது என்று பேசுகிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். ஒரு புனித நோக்கத்தோடு, முதல்வர் இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறார். தைப்பொங்கல் அன்று ஆயிரம் இடங்களில் மக்கள் மருந்தகம் பயன்பாட்டிற்கு வரும்.
இந்தத் திட்டத்திற்கும், அம்மா மருந்தகம் என்ற பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அம்மா மருந்தகம் என்ற பெயரே இல்லை. எந்தத் துறையிலாவது அவர்கள் செய்ததை நாங்கள் செய்தோம் என்று சொல்ல முடியுமா? திமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தான் ஜெயலலிதா திறந்து வைத்து கல்வெட்டு வைத்துக் கொண்டார்.
சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகை, நான் இருந்த பொழுது 90 சதவீதம் முடிந்து விட்டது. ஆட்சி மாறியவுடன் அதற்கு அம்மா மாளிகை என்று பெயர் வைத்துக் கொண்டார். ஸ்டிக்கர் ஒட்டியது யார் என்று நாட்டுக்குத் தெரியும், ஜெயக்குமாருக்கு தெரியாமல் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது. போலி மருத்துவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. யாராவது மாற்றினால் கண்டிப்பாக சிறைக்குச் செல்வார்கள்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (CREDIT -ETVBharat TamilNadu) இதையும் படிங்க: "அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தாமதமாக இதுதான் காரணம்"- அண்ணாமலைக்கு அமைச்சர் முத்துசாமி பதில்! - MINISTER MUTHUSAMY on Annamalai