சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு என விறுவிறுப்பாக செயல்படுகின்றனர். அந்த வகையில், அமமுக, ஓபிஎஸ் அணி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக்கட்சி, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்து, நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.
இத்தகைய சூழலில், கடந்த மார்ச் 10-ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் விடுதியில் பாஜக மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங் மற்றும் கிஷன் ரெட்டி குழு ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்த பிறகு கூட்டணியை உறுதி செய்தனர். அதன் தொடர்ச்சியாக, நேற்றைய முன்தினம் (மார்ச் 11) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், நேற்று (மார்ச் 12) இரவு டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கிண்டி லீ மெரிடியன் விடுதியில் மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங் மற்றும் கிஷன் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர்களான அரவிந்த் மேனன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் தரப்பில் 10 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு பாஜகவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்குச் சம்மதிக்காமல் பாஜகவுடன் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளதாகத் தெரிவித்து 6 தொகுதிகளை ஒதுக்குவதாக பாஜக தலைவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.