சென்னை: சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சமூக நலக் கூடத்தில் தோழர் எஸ்.நடராஜன் படத்திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் பங்கேற்று எஸ் நடராஜனின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
பின்னர் மேடையில் பேசிய திருமாவளவன்,"வலதுசாரி இயக்கங்கள் இடதுசாரி இயக்கங்களை அழித்தொழிக்க நினைக்கின்றன. தேர்தல் நடைமுறை தான் பாஜக வளர காரணமாக உள்ளது. இடதுசாரி இயக்கங்கள் அரசியல் கோட்பாட்டோடு வலிமையோடு உள்ளன. வலதுசாரி இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்தில் வலிமையோடு உள்ளன. தேர்தல் களத்தில் தலித்களை எவ்வாறு கைப்பற்றுவது என்று வலதுசாரி கைதேர்ந்து உள்ளனர். இடதுசாரி மற்றும் அம்பேத்கர் இயக்கங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். போலி தமிழ் தேசியவாதிகள் பெரியாரை கொச்சைப்படுத்தி வருகிறார்கள். தேர்தலுக்கு மட்டுமே என ஒதுங்கி நிற்க முடியாது. பெரியாருக்கு எதிராக பேசும் ஒவ்வொன்றும் அம்பேத்கர், இடதுசாரி இயக்கங்களுக்கு எதிரானவர்கள் தான்.
ஹெச்.ராஜா, அண்ணாமலை, குருமூர்த்தி ஆகியோர் பெரியார் எதிர்ப்பை ஆதரிக்க காரணம் என்ன? பெரியாரை ஏற்காதவர்கள் எல்.டி.டி.ஈ. தலைவர் பிரபாகரனை வரவேற்றது உண்டா? விசிக குறித்து சில நாட்கள் முன்பு பேசப்பட்ட விவாதம் அறிவீர்கள், என்னை சுற்றி என்ன நடந்தது என்று எனக்கு மட்டுமே தெரியும், இந்த மண்ணில் சனாதனம் வேரூன்ற கூடாது என தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டேன்" என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது
"ஆளுநர் ஆர் என் ரவி மீண்டும் மீண்டும் ஒரு அரசியல்வாதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆளுநர் என்ற பொறுப்பை மறந்து, பேசுவதும் செயல்படுவதும் நீடிக்கிறது. தமிழகத்தில் ஒரு தலித் முதலமைச்சர் ஆக வேண்டும் என ஆளுநர் பேசியது, தலித்தைகளை அபகரிக்கும் சூழ்ச்சி. தலித்துகளை பற்றி கரிசனமாக பேசுவது தலித்துகள் முதல்வராக வேண்டும் என்பது வலதுசாரி அரசியல் நாடகம்.
பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக சீமான் செயல்படுகிறாரோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது, தமிழ் தேசியம் பேசும் சீமான் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார். ஈரோடு கிழக்குத் தேர்தலில் பாஜகவின் ஆதரவாளர்கள் வாக்கை பெறுவதற்காக சீமான் அவதூறுகளை பரப்பி வருகிறார், சீமான் செய்யும் அரசியல் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் இப்போது பெரியாரை எதிர்க்க வேண்டிய விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று புரியவில்லை. பாஜக ஆதரவாளர்கள் வாக்குகளை பெற இந்த யுக்தியை கையாளுகிறாரா? என்று ஐயம் எழுகிறது.
தந்தை பெரியார் சனாதன எதிர்பில் உறுதியாக இருந்தார். இன்னும் குறிப்பாக பார்ப்பனர் ஆதிக்கத்தில் எதிர்ப்பாளராக இருந்தார். அவரின் சமகாலத்தில் அவரை வீழ்த்த பார்ப்பன உயர்சாதி அமைப்புகள் மிகக் கடுமையாக அவரை விமர்சித்து வீழ்த்த முயற்சித்தார்கள். ஆனால் முடியவில்லை. அதே வேலையை இவர் செய்கிறார் என்றால், இவர் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா? என்ற கேள்வி எழுகிறது. அவர் செய்யும் அரசியல் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் தேசியம் என்ற பெயரால் தமிழர்களுக்கு எதிரான அரசியல் ஏன் செய்கிறார்? என்ற கேள்வி எழுகிறது. இது அவருடைய எதிர்காலத்திற்கும் நல்லதல்ல என்பதை நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போல் மீண்டும் சுட்டிக் காட்டுகிறேன்.
இவ்வாறு திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறினார்.