தேனி:தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய கஞ்சா விற்பனையாளர் உள்பட ஐந்து நபர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் குறித்து கூடலூர் வடக்கு காவல் ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து போதைப்பொருள் விற்பனை குறித்து கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் லென்சி (22), கூடலூரை சேர்ந்த பாண்டியராஜா (46), ஆண்டிப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (31), பொன்மணி (20) ஆகிய நபர்கள் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களைப் பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் 6.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.