சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தக்காளியின் விலை கிலோவுக்கு 90 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது.
தக்காளியின் விலை மாற்றம் குறித்து கோயம்பேடு சிறு மற்றும் மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.எஸ். முத்துக்குமார் நம்முடைய ஈடிவி பாரத் நிருபரிடம் பேசினார். அப்போது அவர், ''கோயம்பேடு சந்தைக்கு தினமும் 55 முதல் 60 லாரிகளில் சுமார் 1,300 டன் தக்காளி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் விற்பனைக்கு வருகிறது என்றார்.
மேலும், தற்போது அண்டை மாநிலங்களில் மழை பொழிவு இருப்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளைச்சல் முடிந்து இருப்பதாலும் 32 முதல் 35 லாரிகளில் 850 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக வருவதை விட 400 டன் தக்காளி மட்டுமே வருகிறது. இதன் காரணமாக தக்காளி விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு கடந்த மாதம் 50 மற்றும் 60 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை நேற்று 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று பெய்த மழை காரணமாக வியாபாரிகள் குறைவாக வந்ததால், விற்பனை மந்தமாகியுள்ளது. இதனால், தக்காளி விலையில் கிலோவிற்கு 10 ரூபாய் குறைத்து விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தார்.