மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆனையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயத் தொழிலாளி காசம்மாள் (வயது 71). இவர் இயக்குநர் மணிகண்டனின் 'கடைசி விவசாயி' படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு அத்தையாக நடித்து உள்ளார். இந்த படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
காசம்மாளின் மூத்த மகன் நாமக்கோடி (வயது 52), தனது மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 15 ஆண்டுகளாகத் தனது தாயார் காசம்மாளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (பிப். 4) அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த தனது தாயை எழுப்பி மது அருந்த நாமக்கோடி பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பணம் தர மறுத்த தாயிடம் வாக்குவாதம் செய்த நாமக்கோடி ஆத்திரத்தில் அருகே இருந்த கட்டையை எடுத்து காசம்மாளின் தலையில் அடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் காசம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதனை அறிந்த அருகாமை வீட்டார் காவல் துறையினருக்குத் தகவல் அளித்து உள்ளனர்.