மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கான ஏல அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதில் விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்றனர்.
இந்த நிலையில், மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து தமிழக அரசு நேற்று சட்டமன்ற சிறப்ப கூட்டத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது. அத்துடன் தமிழக அரசின் அனுமதி இன்றி எந்தவித கனிம திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது எனவும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலூர் பகுதி மக்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu) அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். "நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற தீர்மானம் குறித்து தங்களது கருத்துக்களை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துடன் பகிர்ந்து கொண்டனர்.
அந்த வகையில் டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் நிர்வாகி கம்பூர் செல்வராஜ் கூறுகையில், "தமிழக அரசின் தீர்மானத்தை முழுமனதோடு நாங்கள் வரவேற்கிறோம். அமைச்சர் மூர்த்தி மற்றும் மேலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் ஆகியோர் வேலூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது தீர்மானம் நிறைவேற நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் அன்றைக்கு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இதனை அடுத்து, நேற்று இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சிக்கிடையே பல்வேறு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் கூட இந்த ஒரு விஷயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானம் ஏற்றியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். இந்தத் தீர்மானத்தோடு நின்றுவிடாமல் தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு அழிவு திட்டங்களுக்கு தமிழக அரசு எதிராக எப்போதும் இருக்க வேண்டும்.
இதுமட்டும் அல்லாது, மேலூர் டங்ஸ்டன் திட்டத்தை முழுவதுமாக ஆய்வு செய்து பார்த்தபோது 5000 ஏக்கர் மட்டுமின்றி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட எல்லைப்புற மாவட்ட பகுதிகளில் ஏறக்குறைய 34,000 ஏக்கர் நிலங்களை இந்த திட்டத்திற்காக குறி வைத்துள்ளார்கள் என்பது அதிர்ச்சியான தகவல் தான். இதற்கான ஆய்வுகளை முழுமையாக செய்து முடித்துவிட்டனர்.
இதையும் படிங்க:"முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை அனுமதிக்கமாட்டேன்"..அவையில் சூளுரைத்த முதல்வர்! தீர்மானத்தின் மீது ஈபிஎஸ் எடுத்த முடிவு என்ன?
பண்பாட்டு மண்டலம்:கீழக்குயில்குடி தொடங்கி கருங்காலக்குடி வரை மதுரையின் பண்பாட்டு மண்டலமாக தமிழக அரசு அறிவித்து அதற்கான சட்டம் இயற்றி அரசிதழில் வெளியிட வேண்டும். அப்படி செய்தால்தான் தமிழக அரசு இதனை முழுமையாக செய்து முடித்ததாக மக்கள் நம்புவார்கள். இந்த ஏல அறிவிப்பை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும். அதற்கான மக்கள் போராட்டங்களை தமிழக அரசு தொடர்ச்சியாக அனுமதிக்க வேண்டும்" என்று செல்வராஜ் தெரிவித்தார்.
போராட்டம் தீவிரமடையும்:மேலூர் பகுதியைச் சேர்ந்த முத்துராமகிருஷ்ணன் கூறுகையில், "இப்போதைக்கு மேலூர் வட்டத்தை பாதுகாக்கும் ஒரு தீர்மானத்தை தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றியுள்ளது. அதனை முழுமையாக வரவேற்கிறோம். பல்வேறு வகையான உயிரினங்கள் மற்றும் தொல்லியல் சார்ந்த பழமையான கட்டமைப்புகள், குகை கோயில்கள் இப்பகுதிகளில் உண்டு.
அரிட்டாப்பட்டியை பல்லுயிர் சூழல் மண்டலமாக தமிழக அரசு அறிவித்திருந்தும் கூட அப்பகுதி மத்திய அரசு டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு ஏல அறிவிப்பை வெளியிட்டது. ஏறக்குறைய 20 கிலோ மீட்டர் சுற்றளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் அமைதியான முறையில் போராடினர். இதற்காக ஆளும் கட்சியும், எதிர்க்கட்சி ஒருங்கிணைந்து கொண்டு வந்த தீர்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம். இதற்குப் பிறகும், மத்திய அரசு இந்த முயற்சியில் இறங்குமானால் போராட்டம் மிக தீவிரமடையும்" என்று எச்சரித்தார்.
இந்த மண் தான் வாழ்வாதாரம்:மீனாட்சிபுரம் காலனியைச் சேர்ந்த புலியம்மாள், மூக்கம்மாள் ஆகியோர் கூறுகையில், "இந்த தீர்மானத்தை கொண்டு வந்த தமிழக முதலமைச்சருக்கும் மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மண் தான் எங்களுக்கு இருக்கிற ஒரே வாழ்வாதாரம். இதிலிருந்து எங்களை அப்புறப்படுத்திவிட்டால் எங்களுக்கு வாழ்வதற்கு வேறு வழி இல்லை. காலம் காலமாக இந்த மண்ணை நம்பியே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகையால் மத்திய அரசு இத்திட்டத்தை முழுவதுமாக கைவிட வேண்டும்" என்று கோரிகை விடுத்தனர்.