சென்னை: கரோனா தொற்று பாதித்த சென்னை பாடியில் வசித்து வந்த ஆஸ்டின் என்பவர் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் அம்பத்தூர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், ஆஸ்டின் உடலை தோண்டி எடுத்து, சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லுக்கூட்டம் கிராமத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆஸ்டினின் மனைவி ஜெயா விண்ணப்பித்திருந்தார்.
இதனை மாநகராட்சி நிராகரித்து கடந்த ஜனவரி 23 ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஜெயா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, உடலை தோண்டி எடுத்து சொந்த ஊரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை..! - தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆஸ்டினின் உடல் கண்ணியமான முறையில் அடக்கம் செய்யப்பட்டதாகவும், அந்த இடத்தில் அவரது பெயரில் சமாதியும் கட்டப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் பல இடங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பின் ஆஸ்டின் உடலை தோண்டி எடுக்க அனுமதித்தால், பல பிரச்னைகள் ஏற்படும் எனவும் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆஸ்டினின் உடலை தோண்டி எடுக்க அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆஸ்டினின் மனைவி ஜெயாவுக்கு உத்தரவிட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்