கோயம்புத்தூர்:தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில், கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோயம்புத்தூர், தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டாங்க் ரூம் எனப்படும் இருட்டு அறையில் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் முகவர்களும் அங்கு 24 மணி நேரம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து கல்லூரியைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிக்குள் வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் முழுமையாகச் சோதனை செய்யப்பட்ட பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகிறது.
மாணவர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டைகளைக் காண்பித்த பின் உள்ளே செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் வாகனங்கள் உள்ளிட்ட பிறரின் வாகனங்கள் கல்லூரியின் மைதானத்தில் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அருகே வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.