தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஐஐடி-யில் சாஸ்த்ரா திருவிழா; ஜனவரி 3ந் தேதி முதல் 7ந் தேதி வரை நடக்கிறது..! - IIT SHASTRA FESTIVAL 2025

சென்னை ஐஐடியில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தொழில்நுட்பத் திருவிழா ஜனவரி 3ந் தேதி முதல் 7 ந் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

ஐஐடி-யில் சாஸ்த்ரா திருவிழா
ஐஐடி-யில் சாஸ்த்ரா திருவிழா (credit - etv bharat tamil nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2024, 6:13 PM IST

Updated : Dec 30, 2024, 7:16 PM IST

சென்னை: மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை ஐஐடியில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தொழில்நுட்பத் திருவிழா ஜனவரி 3ந் தேதி முதல் 7 ந் தேதி வரையில் நடைபெறவுள்ளது. முதல்முறையாக கடல்சார் தொழில்நுட்பம் குறித்து அறிந்துக் கொள்ளும் வகையில் தேசிய பெருங்கடல் தொழில்நுட்பக் கழகமும் தனது கண்டுபிடிப்புகளை இவ்விழாவில் காட்சிப்படுத்துகிறது.

சென்னை ஐஐடி மாணவர்களால் நடத்தப்படும் சாஸ்த்ரா திருவிழா ஜனவரி 3ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடக்கிறது. இந்த திருவிழாவில் 130 அரங்குகள் இடம் பெறுகின்றன. அடுத்தடுத்து 80 நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், ஐந்து நாட்களில் 1 லட்சம் பேர் பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த திருவிழாவில் மாணவர்களுக்கு போட்டிகள், மாநாடுகள், விரிவுரைகள், கண்காட்சிகள், கருத்தரங்கத்துடன் தொழில்நுட்ப நிகழ்வை சாஸ்த்ரா கொண்டாடவிருக்கிறது.

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

80 நிகழ்ச்சிகள்

இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், சென்னை ஐஐடியின் மாணவர்களால் நடத்தப்படும் சாஸ்த்ரா ஜனவரி 3ந் தேதி முதல் 7ந் தேிதி வரையில் நடைபெறுகிறது. மாணவர்கள் இதுபோன்ற தேசிய நிகழ்வுகளில் பங்கேற்று திறமையை வெளிக்கொணர முடிகிறது. பல்வேறு அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்கள், தொழில்முனைவோர் மட்டுமின்றி தலைசிறந்த முக்கிய பிரமுகர்களையும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். மேலும் 130 அரங்குகள் அமைக்கப்பட்டு, 80 நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

ஐஐடி-யில் சாஸ்த்ரா திருவிழா (credit - etv bharat tamil nadu)

சாஸ்த்ரா வான்வழி ரோபாட்டிக்ஸ் சேலஞ்ச் (Shaastra Aerial Robotics Challenge), ரோபோ சாக்கர் (RoboSoccer), ஆல்கோ டிரேடிங் (Algo Trading), பெட்ரி டிஷ் சவால் (Petri-dish Challenge) ஆகிய நிகழ்வுகளும் நடக்கும். மேலும், முதல் முறையாக தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகம் கடல் வளத்தில் உள்ள தொழில் நுட்பங்களையும் காட்சிப்படுத்துகிறது. கடல்சார் தொழில்நுட்பத்தின் பொருளாதாரம் நாட்டிற்கு தேவையாக உள்ளது. இதில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

ஐஐடி-யில் சாஸ்த்ரா திருவிழா (credit - etv bharat tamil nadu)

கடல்சார் தொழில்நுட்பம்

இந்தாண்டு சுமார் 1 லட்சம் மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். மாணவர்கள் எல்லா ஆய்வகத்தையும் பார்வையிடலாம். அரங்குகளை பார்வையிடலாம். மாணவர்களுக்கு தேவையான வதிகளை செய்துள்ளோம். தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகத்துடன் ஐஐடியும், என்ஐஒடியும் சேர்ந்து கண்காட்சி வைக்க உள்ளோம். இதனால் மாணவர்களுக்கு கடல்சார் பொருளாதாரத்தில் ஆர்வம் வரும் வகையில் அமைக்க உள்ளோம்'' என தெரிவித்தார்.

ஐஐடி-யில் சாஸ்த்ரா திருவிழா (credit - etv bharat tamil nadu)

தேசிய கடல்சார் தொழில்நுட்ப பல்கலைக் கழக (NIOT) இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் கூறும்போது, '' சென்னை ஐஐடி-யில் 30 ஆண்டுகளில் கண்டுபிடித்த தொழில்நுட்பங்களை கண்காட்சியில் வைக்க உள்ளோம். தொழில்நுட்பம், கடல்சார் அறிவியல் போன்றவற்றில் அன்றாட சவால்களுக்குத் தீர்வுகாண இளைஞர்களை ஊக்குவிப்பதிலும், கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதிலும் எங்களின் இரு கல்வி நிறுவனங்களின் இலக்கும் ஒன்றே.

சாஸ்த்ரா போன்ற முதன்மையான தொழில்நுட்ப நிகழ்வில் பங்கேற்று அடுத்த தலைமுறையினரை ஊக்கப்படுத்துவதே எங்களின் நோக்கம். கடல்சார் தொழில்நுட்பம் மற்றும் மேம்பாடு துறையில் இந்தியா உலகளாவிய தலைமையாக உருவெடுக்கவும், நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டவும் உறுதிபூண்டிருப்பதை இந்த கூட்டாண்மை எடுத்துக்காட்டுகிறது. சமுத்ராயன் திட்டத்தின் படி 6,000 ஆயிரம் மீட்டர் கடலுக்குள் எவ்வாறு செல்ல முடியும் என்பதையும், தொழில்நுட்படத்தையும் காட்சிப்படுத்த உள்ளோம்'' என தெரிவித்தார்.

Last Updated : Dec 30, 2024, 7:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details