தஞ்சாவூர்: மனிதனின் உணவு பழக்கமானது, காலத்திற்கு ஏற்ப மாறுப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய உணவு வகைகள் பெரும்பாலும் ரசாயன உரங்கள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களாக இருக்கின்றனர். இதற்கு காரணம் நாம் உணவுப் பொருட்களை பதப்படுத்தி உண்ணும் நிலையை விரும்பி ஏற்பதனால் எனலாம். இந்த வகை உணவுப் பொருட்கள் கெடாமல் நீண்ட நாள் இருந்தாலும், நமது ஆரோக்கியதிற்கு அதிகளவு கெடுதலை தரக்கூடியது. எனவே சமீபகாலமாக பலர் இயற்கை உணவு வகைகளுக்கு மாறி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் சோழ மண்டல இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு, மாஸ் கல்வி குழுமம் மற்றும் தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் அமைப்பும் இணைந்து கும்பகோணம் மாஸ் கல்லூரி வளாகத்தில் இன்று (ஆக.10) மற்றும் நாளை (ஆக.11) என இரு நாட்களுக்கு "இயற்கை வேளாண் திருவிழா 2024" நடத்தி வருகிறது. இதில் இயற்கை வேளாண் உழவர்கள் விளைவிக்கும், பொருட்களை சந்தைபடுத்தும் தளமாக அமைந்திருக்கிறது.
இதுகுறித்து பேசிய சோழ மண்டல இயற்கை உழவர்கள் கூட்டமைப்பின், தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டி பாலசுப்பிரமணியன், "இந்த திருவிழா உழவர்களையும், நுகர்வோரையும் நேரடியாக இணைக்கும் பாலமாகவும் உள்ளது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சி கும்பகோணம் மாஸ் கல்லூரி தாளாளர் விஜயகுமார் தலைமையில் தொடங்கியது.
இதில் சோழ மண்டல இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தலைவர் ராஜேந்திரன், கல்விக்குழு அறங்காவலர் விக்னேஷ்குமார், கல்லூரி முதல்வர் சரவணன், தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் கே.எம் பாலு உள்ளிட்ட எண்ணற்ற விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் என பலர் பங்கேற்றனர்.