தஞ்சாவூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் மனு தாக்கல் தஞ்சாவூர்: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட, வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர், வேட்பு மனுவை எடுத்து வர மறந்த நிலையில், நீண்ட நேர போரட்டத்திற்கு பின்னர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனால், வேட்பாளர் உட்பட கட்சி நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இம்முறை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாளை (புதன்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அந்த வகையில், அந்தந்த அரசியல் கட்சிகள் சார்பில் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் சிவநேசன், நேற்று (திங்கட்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்ய தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் புடைசூழ ஊர்லமாக வந்த அவர், ஆட்சியர் அலுவலக நுழைவாயில் வந்ததும், தேர்தல் ஆணைய உத்தரவுபடி ஐந்து நபர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றார்.
அப்போது, வேட்பு மனு இல்லாததைக் கண்டு பதற்றம் அடைந்த சிவநேசன், கட்சி நிர்வாகிகளிடம் செல்போனில் பேசினார். பின்னர் அவர்களுடைய வழக்கறிஞரிடம் நடந்ததைக் கூறியதையடுத்து, வழக்கறிஞர் வரும் வரை நீண்ட நேரமாக காத்திருந்து, அவர் வந்ததும் வேட்பு மனுவை தாக்கல் செய்ய சென்றார்.
அப்போது, வேட்பாளரை முன்மொழிபவர் அங்கு இல்லாததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், நுழைவாயில் அருகே சென்று முன்மொழிபவரை அழைத்துக் கொண்டு, தஞ்சை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான தீபக் ஜேக்கப்பிடம் வேட்பு மனுவினை சிவநேசன் தாக்கல் செய்தார். இதனால் தேமுதிக வேட்பாளர் சிவநேசன் உட்பட கட்சி நிர்வாகிகள் அனைவரும் பரபரப்பாக காணப்பட்டார்.
இதையும் படிங்க:நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல்; சேகர்பாபு, ஜெயக்குமார் இடையே கடும் வாக்குவாதம்! - Sekarbabu Vs Jayakumar