தஞ்சாவூர்/திருவாரூர்:தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான புத்தூர், உக்கடை, கோவிந்தநல்லூர், விழுதியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.
இப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் தூர்வாராத காரணத்தால் மழை நீர் விளை நிலங்களுக்குள் புகுந்து குளம் போல் காட்சியளிக்கிறது. இதில் நடவு செய்த இளம் பயிர்கள் மற்றும் 30 நாள் பயிர்கள், நீரில் மூழ்கி இருப்பதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தஞ்சாவூரில் மேலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அரசு போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் விவசாயி செந்தில்குமார், “வாய்க்கால்களை தூர்வாரக் கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தற்போது விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளோம். இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க:பயிர்களை தாக்கும் மக்காச்சோள படைப்புழு.. பாதிப்பை தடுப்பது எப்படி? - வேளாண் வல்லுநர் கூறும் ஆலோசனைகள்!