தென்காசி:தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவுக்குட்பட்ட ஆய்க்குடி பேரூராட்சியில், வனத்துறைக்குச் சொந்தமான பகுதி உள்ளது. இப்பகுதிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குபவர்கள், பிரதான வழியில் செல்லாமல், காட்டு வழிப்பாதை என்பதால் இந்த பகுதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, ஆய்க்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தன்னிச்சையாக செயல்பட்டு, இரவு நேரத்தில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் வனத்துறைக்குச் சொந்தமான மரத்தை வெட்டி பாதையை அடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் பாதையானது ஆய்க்குடியில் இருந்து கம்பளி கிராமத்திற்குச் செல்லும் பாதையாக உள்ளது.
அதோடு, இந்த பாதை வழியாகவே ஆடு, மாடுகளை மேய்ப்போர் தங்கள் கால்நடைகளை ஓட்டிச் சென்று மேய்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கம்பளி கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் கால்நடை வளர்ப்பு தொழிலையே சார்ந்து வாழும் நிலையில், தற்போது இந்த பாதை அடைக்கப்பட்டு இருப்பதால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், இந்த வெட்டப்பட்ட மரமே தற்போது கால்நடைகள் மற்றும் மான்கள் உள்ளிட்டவைகளின் தீனியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவர் சண்முக ராஜன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நெல்லையில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு தொடக்கம்! - TAHR SURVEY In Tirunelveli