தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தோணுகால் ஊராட்சி பகுதியில் உள்ள விமான ஓடுதளத்தை விமான பயிற்சி மையத்துக்குப் பயன்படுத்தப்படும் என, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அப்போது தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.
அதாவது, தோணுகால் கிராமத்தில் மொட்டை மலை அடிவாரத்தில் 1.2 கி.மீ நீளம் மற்றும் 15 மீட்டர் அகலத்தில் விமான ஓடுதளம் அமைந்துள்ளது. இது கோவையைச் சேர்ந்த லட்சுமி ஆலை நிர்வாகம் சார்பில், தங்களது தனி விமானத்தை இறக்குவதற்காக உருவாக்கப்பட்டது. அவர்கள் செஸ்னா வகை சிறிய ரக விமானத்தில் வந்து சென்றுள்ளனர். காலப்போக்கில் வேறு சிலரும் இந்த ஓடுதளத்தைப் பயன்படுத்தி உள்ளனர்.
நாலாட்டின்புதூர் மற்றும் தோணுகால் ஆகிய இரு கிராமங்களில் 63 ஹெக்டேர் நிலத்தில் அமைந்துள்ள இந்த ஓடுதளம், 1998ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வரின் 'நான் முதல்வன் திட்டத்தின்' கீழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க 50 வகையான தனித்திறன் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதில், தமிழ்நாட்டில் விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி மையம் அமைக்கும் திட்டமும் ஒன்று.
இதையும் படிங்க: 9 ஆயிரம் கோடி முதலீடு, 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்!
மேலும், தூத்துக்குடி கோவில்பட்டி வட்டம் தோணுகால் ஊராட்சி பகுதியில் ஏற்கனவே லட்சுமி ஆலை நிர்வாகத்தினர் அரசு நிலத்தை ஒப்பந்த அடிப்படையில் பெற்று விமான ஓடுதளம் அமைத்துப் பயன்படுத்தி வந்த இடம் தற்போது பயன்பாடு இன்றி உள்ளதும், தனியார் ஆலை நிர்வாகத்தினர் முறைப்படி அந்த நிலத்தை அரசிடம் திரும்ப ஒப்படைத்து விட்டதால், அதில் விமான பயிற்சி மையம் அமைக்க ஏதுவாக இருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் கருத்துரை சமர்ப்பித்தார்.
மேலும், பயிற்சி மையம் அமைக்கத் தேவையான சுமார் 35 ஏக்கர் நிலம் உள்ளது. அதனால் நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது எனவும், தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம் விமான நிலையங்கள் அருகேயே இருப்பதால், விமான பயிற்சிக்கு ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக திட்ட இயக்குனர் பி.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தொழில்நுட்ப வல்லுநர்கள், கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சி மொட்டை மலை அடிவாரத்தில் உள்ள விமான ஓடுதளப் பாதையை ஆய்வு செய்தனர்.
இந்த ஓடுதளம் கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள நிலையில், அடிப்படையான பழுதுபார்த்தல் மூலம் இந்த ஓடுதளத்தைப் பயன்படுத்த முடியும். இதனை சீரமைப்பதன் மூலம் 10க்கும் மேற்பட்ட பயிற்சி விமானங்களை கையாள முடியும் என்பதைக் கண்டறிந்தனர். இந்த நிலையில், விமான பயிற்சி மையத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், கோவில்பட்டி விமான ஓடுபாதையில் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டிற்கான மாஸ்டர் பிளான், விரிவான பொறியியல் மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசனை சேவைகளுக்கான ஆலோசகர்கள் தேர்வு, டிட்கோ சார்பாக டெண்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பாக தென் தமிழகத்தில் விமான பயிற்சி மையம் அமைக்கும் பணியைத் துரிதப்படுத்தியுள்ளது அப்பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.