கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் காளப்பட்டி நேரு நகர் பகுதியில் தனியார் துவக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக இயங்கி வரும் இப்பள்ளியில் தற்போது தமிழின் முந்தைய வடிவமான 'தமிழி' எழுத்துக்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. 2ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை தமிழில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு 'தமிழி' எழுத்து வடிவம் இங்கு கற்று கொடுக்கப்படுகிறது.
இதனை அப்பள்ளியின் தமிழ் ஆசிரியை கவிதா கற்று தருகிறார். தமிழ் வகுப்பு நடத்தும் போதே தமிழ் பாடத்துடன் சேர்த்து 'தமிழி' எழுத்து வடிவங்களையும் சேர்த்து கற்று தரப்படுகின்றன. இது குறித்து ஆசிரியை கவிதா கூறுகையில், "நான் இந்த பள்ளியில் 25 ஆண்டுகளாகத் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன்.
ஆசிரியர் மற்றும் மாணவி பேட்டி (ETV Bharat Tamil Nadu) ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழோடு சேர்த்து தமிழியையும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். தமிழி என்றால் என்ன? என்பது குறித்து பலருக்கு சந்தேகம் எழலாம். பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான நம்முடைய தாய் மொழியாம் தமிழின் முந்தைய வடிவம் தான் 'தமிழி'. இந்த மொழியில்தான் கல்வெட்டுகள், கோயில்கள் உள்ளிட்டவற்றில் நம்முடைய முன்னேர்கள் எழுதியுள்ளனர்.
இதனை என்னுடைய மாணவர்களுக்கு கற்றுத்த தர வேண்டும் என நினைத்தேன். இதனை முன்னெடுக்கப் பள்ளியின் தாளாளர் முத்துச்சாமி உறுதுணையாக இருந்தார். தமிழ் மொழியுடன் சேர்ந்து அதன் முந்தைய வடிவமான தமிழி எழுத்துக்களையும் கற்று கொடுக்கும் போது மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்கிறார்கள்.
மேலும் நம்முடைய மொழி குறித்தான உணர்வு மாணவர்கள் மத்தியில் அதிகளவு கொண்டு செல்லவும் இது உதவுகிறது" என்றார். மேலும் தமிழக அரசு தமிழ் மொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இச்சூழலில் தமிழோடு இணைந்து தமிழி எழுத்துக்களையும் இணைந்து கற்று கொடுத்தால் மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத் தொகைத் திட்டத்தில் இடஒதுக்கீட்டு முறை; அமைச்சர் சொன்ன தகவல்!
பின்னர் பேசிய மாணவி யாழினி ஸ்ரீ,"தமிழி எழுத்து வடிவம் வித்தியாசமாக உள்ளது. எனவே எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இதனை மிக எளிமையாக எங்கள் ஆசிரியர் கற்றுக்கொடுக்கிறார், அதனை ஆர்வமுடன் கற்று வருகிறோம். தற்போது என்னால் தமிழி எழுத்துக்களை படிக்க முடியும் எழுத முடியும் அதற்கான பொருளையும் கூற முடியும்" என தெரிவித்தார்.