சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், திமுக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன் கூறும்போது, “திமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் மாபெரும் வெற்றிக் கூட்டணியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி பயணித்து வந்திருக்கிறது.
அந்த வகையில், நடைபெற இருக்கின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கித் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதற்கான நியாயமான காரியங்களையும் எடுத்து வைத்துள்ளேன். கடந்த மூன்று தேர்தல்களிலும் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான இடங்களுக்குச் சென்று, பிரச்சார பீரங்கியாக இருந்து மாபெரும் வெற்றிக் கூட்டணியில் நானும் ஒரு சிறு பங்காற்றி இருக்கிறேன்.
அந்த வகையில், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குரல் தமிழக சட்டமன்றத்தில் எப்படி தமிழ்நாட்டு மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது? அதேபோல நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தையும், கட்சியின் பொதுக்குழு தீர்மானத்தையும், திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் அளித்திருக்கிறேன். முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நல்ல பதிலை தருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட வேண்டும் என கேட்டுள்ளேன். பீகார், கர்நாடகாவில் நடத்தி முடித்துவிட்டார்கள். தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கின்றது. சமூக நீதியின் தாயகமாக இருக்கிற தமிழ்நாட்டிலும், சாதி வாரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்ற அழுத்தமான வேண்டுகோளையும் முன் வைத்துள்ளேன்.
இந்த சந்திப்பு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய சந்திப்பாக இருக்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்களுக்கும், அதன் தலைவராக இருக்கின்ற எனக்கும் முதலமைச்சர் நல்ல செய்தியைத் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. எனது கட்சியின் சார்பாக செல்லும் உறுப்பினர் பாசிச பாஜகவை எதிர்க்கவும், தமிழ் உரிமை பறிக்கப்பட்டு வருவது குறித்து, என்னைப் போலவே நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக வாய்ப்பை தாருங்கள் என வேண்டுகோள் வைத்துள்ளோம்.
தமிழ்நாடு முழுவதும் கட்டமைப்பு கொண்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு உள்பட 40 தொகுதிகளில் எந்த தொகுதியைக் கொடுத்தாலும் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:திருக்கோவிலூர், விளவங்கோடு இடைத்தேர்தல் எப்போது? - சத்யபிரதா சாகு விளக்கம்!