திருச்சி: பாஜக ஆளும் மாநிலங்களிலேயே பெண்களுக்கு, மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதனால், பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச பாஜகவுக்கும், அண்ணாமலைக்கு எந்த அருகதையும் கிடையாது என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்துத்துப் பேசிய திருச்சி எம்.பி துரை வைகோ, "தமிழ்நாடு பள்ளிகல்விதுறை அமைச்சர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும், 500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஆனால், எதிர் கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள். தமிழ்நாடு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 500 அரசுப் பள்ளிகளில் இருக்கும் அடிப்படை, கட்டமைப்பு மேம்படுத்த தனியார் பள்ளிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று தான் கூறினார்.
மும்மொழி கொள்கைக்கு வறிபுறுத்துவது ஏன்?
ஒன்றிய அரசிடம், அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பிச்சை எடுப்பது போல் நிதியை கேட்டார்கள். ஆனால், ஒன்றிய அமைச்சர் தேசிய கல்விகொள்கை ஏன் ஏற்க முடியாது என்று சொல்லுகிறீர்கள் என கேட்டார். தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கை தான் என்று கூறினோம். ஆனால் மூன்றாவது மொழியாக இந்தி, சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என சொல்வது ஏன்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதியை முழுமையாக வழங்க முடியும் என தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், ஒருவேளை மும்மொழிக் கொள்கை என்றால், இந்தியைத் தவிர படிக்க வேறு வெளிநாட்டு மொழியே இல்லையா? மூன்றாவது மொழியைப் படிப்பது என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விருப்பம் என்றார்.
திருச்சி மெட்ரோ:
தற்போது, திருச்சி பன்னாட்டு விமானநிலையத்தில் ஓடுதளம் விரிவாக்கம் பணிகள் 97 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் 6 மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை என்றார். மேலும், மெட்ரோ திட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் தற்போது தான், கோவையிலும் மதுரையிலும் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏன் சென்னைக்கே சமீபத்தில் தான் நிதி ஒதுக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "உயிரோடு இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜகவை வர விடமாட்டேன்" - மதிமுக வைகோ பேச்சு!
அதனைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பொங்கள் சிறப்பு தொகுப்பாக மக்களுக்கு ரூபாய் 30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார் என்ற கேள்விக்கு? செல்லூர் ராஜூ கூறியது ஆங்கில புத்தாண்டு ஜோக் ஆகும். இதனை பற்றி பேசத் தேவையில்லை என்றார்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்:
பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் மாநிலம் உத்திர பிரதேசம். அங்கு ஆட்சியில் இருப்பது பாஜக. அதேபோல், டெல்லியிலும் சட்டம் ஒழுங்கு, பாஜக கையில் உள்ளது. ஆனால் தலைநகரிலேயே எந்த பாதுகாப்பும் இல்லை. குறிப்பாக வாரத்துக்கு ஒரு துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. தலைநகரத்திலே மக்களுக்குப் பாதுகாப்பில்லை.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு, இனிவரும் காலங்களில் நடக்காமல் மாநில அரசு நடவடிக்கை தீவிர படுத்த வேண்டும். மாணவி பாலியல் புகாரில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது மாநில அரசு. மாணவி பாலியல் புகாரில் திமுக நிர்வாகிகள் சம்பந்தப்பட்டதாகப் பொய்யான குற்றச்சாட்டுகளை பாஜக அண்ணாமலை எழுப்பி வருகிறார். ஒரு புகைப்படத்தை வைத்து எதையும் முடிவு செய்யக் கூடாது. இது முற்றிலும் தவறானது" எனத் தெரிவித்தார்.