திருச்சி: 2025-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஆனால், இந்தாண்டு பொங்கல் தொகுப்பில் ரொக்க பரிசு இடம்பெறவில்லை. எனவே தமிழக அரசு பொங்கல் தொகுப்புடன் சேர்ந்து பரிசு தொகையையும் சேர்க்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருச்சியில் பேட்டியளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் பொங்கல் பரிசாக 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டெல்டா மண்டல நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் இன்று (ஜன.2) நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜி.கே.வாசன் கூறியதாவது, '' இயக்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில் உறுப்பினர் சேர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் குரல் வலுவானதாக இருக்கும்.
இதையும் படிங்க: "ஆசிரியர்களுக்கு மூன்று மாதம் சம்பளம் இருப்பில் உள்ளது" - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி!
அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டியது எதிர்கட்சிகளின் கடமை. அரசு உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு விசாரணையில், அரசு ஏதேனும் மறைக்க நினைத்தால், அதனை மக்களுக்கு தொடர்ந்து நினைவூட்டுவது எதிர்க்கட்சிகள் கடமை.
''வெட்கக்கேடானது''
ஜனநாயக ரீதியாக போராடுபவர்களை கைது செய்வதன் மூலம் எதிர்க்கட்சிகளின் குரலை அரசு ஒடுக்கிவிட முடியாது. அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் திமுகவிற்கு முட்டுக்கொடுக்கும் கூட்டணி கட்சிகளின் செயல் வெட்கக்கேடானது.
புயல், கன மழையால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு இழப்பீட்டை இன்னும் வழங்கவில்லை. ஏக்கர் ஒன்றுக்கு நெற் பயிருக்கு 35,000 ரூபாய், தோட்டப் பயிர்களுக்கு 25,000 ரூபாய் வழங்க வேண்டும். பயிர்க்காப்பீட்டுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முழுமையான நிதியை ஒதுக்க வேண்டும்.
தனியாருக்கு மனமகிழ் மன்றம் என்ற பெயரில் FL2 மதுபான கடை உரிமம் தருவதை அரசு நிறுத்த வேண்டும். பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தான் தமாகாவின் நிலைப்பாடு.
இடைத்தேர்தல் வரும் போதெல்லாம் பொங்கல் பரிசாக அதிகளவு பணம் வழங்கிய திமுக அரசு தற்போது பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கம் வழங்காதது ஏற்புடையது அல்ல. எனவே, பொங்கல் பரிசு தொகுப்பில் அனைவருக்கும், 3,000 ரூபாய் வழங்க வேண்டும்.