திருப்பூர்: கொங்கு மண்டலத்தின் முக்கிய தொழில் நகரமாக திருப்பூர் அறியப்படுகிறது. பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமக்கென தனி இடத்தை பெற்றுள்ள திருப்பூர், பல்லாயிரக்கணக்கான வெளிமாவட்டத்தினர் மற்றும் வெளிமாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இடமாக திகழ்கிறது. இதன் காரணமாக திருப்பூர் மக்களவைத் தொகுதியும் தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் தொகுதியாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திருப்பூர் தொகுதி 18 தொகுதியாக உள்ளது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு என்ற இரண்டு சட்டமன்ற தொகுதிகள் திருப்பூர் மாவட்டத்திலும், பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் ஈரோடு மாவட்டத்திலும் அமைந்துள்ளன. இத்தொகுதி, 2009க்கு முன்பு கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி என்று அழைக்கப்பட்டது.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியாக பிரிக்கப்பட்ட பின்னர் மூன்று மக்களவை பொதுத் தேர்தலை சந்தித்துள்ள இத்தொகுதியில், அதிமுக இரண்டு முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கவனம் பெற்ற நோட்டா: 2009 மர்றும் 2014 ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், 2019ல் நடைபெற்ற தேர்தலில் ஆறு வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், ஆறு வேட்பாளர்கள் சுயேச்சையாகவும் என மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் திமுக கூட்டணி கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் 5,00,825 வாக்குகளும், அவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட எம்.எஸ்.எம். ஆனந்தன் 4,15, 357 வாக்குகளும் பெற்றனர். இவர்களுக்கு அடுத்ததாக, மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த சந்திரகுமார் 64 ,657 வாக்குகளும், அமமுக சார்பில் போட்டியிட்ட செல்வம் 43, 816 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஜெகநாதன் 42,189 வாக்குகளும் வாங்கியிருந்தனர். நோட்டாவுக்கு 21,861 வாக்குகள் விழுந்திருந்தது. இத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 93,368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2024 இல் வாக்குப்பதிவு எவ்வளவு?:திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7,86,475, பெண் வாக்காளர்கள் 8,11,718, மூன்றாம் பாலினத்தவர் 250 என மொத்தம் 15,98,443 வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 9,72,082 பேர் தங்கள் வாக்கினைப் பதிவு செய்த நிலையில், மொத்த வாக்குப்பதிவு 70.62 சதவீதமாகும். முன்னதாக, 2019ல் 73.21 சதவீதம் வாக்கு பதிவாகியது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தே உள்ளது.