சென்னை:சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், கடந்த மார்ச் 11ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி, அனைத்து மாநில பல்கலைகழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டத்தை கூட்டி, முதல்முறை வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குரிமை செலுத்துவதை உறுதிப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
முதல்முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அடுத்த 10 நாட்களுக்குள் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைப்பதை எளிமைப்படுத்தவும், இந்த முயற்சியில் என்சிசி மற்றும் என்எஸ்எஸ் தன்னார்வலர்களை பயன்படுத்தவும், வாக்களித்தவர்களுக்கு இணையவழிச் சான்றிதழ் கிடைப்பதற்கான செயலியை உருவாக்கவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை ஒரு இயக்கம் போல செயல்படுத்தவும் துணை வேந்தர்களும் ஒப்புக் கொண்டனர்.
100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்திய துறைகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடத்தப்படும், அதிக சதவீத வாக்குகளைப் பெற்ற பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் பாராட்டப்படுவார்கள் என ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது.
இதையடுத்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளார் (பொறுப்பு) ராமகிருஷ்ணன், அனைத்து கல்வியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் வாக்களர் அடையாள அட்டை எண்களைப் பெற்று அனுப்ப வேண்டும் என கூறினார். இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது.