கோயம்புத்தூர்:தமிழ்நாட்டில் ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்வு நடைமுறையில் எடுக்கப்படும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது. அதன்படி, தொழில் மட்டும் ஐடி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட் விலை 4.83 சதவீதம் அதிகரித்து, 8 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், கொடிசியா தலைவர் கார்த்திகேயன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) இந்த மின் கட்டண உயர்வு சிறு, குறு, மைக்ரோ தொழில்துறையினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து கொடிசியா தலைவர் கார்த்திகேயன் செய்தியாளரிடம் பேசியபோது, “இந்த மின்சாரக் கட்டண உயர்வு சிறு, குறு, மைக்ரோ தொழில்துறையினரை பெரிதும் பாதிக்கப் போகிறது.
அதிலும், கோவையில் தான் 97 சதவீதம் நுண் தொழில்துறையும், 2 சதவீதம் சிறு தொழில்துறையும் இயங்கி வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையான கட்டணங்கள் (Fixed Chargers) 30 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்தப்பட்டதில் ஏற்பட்ட தாக்கங்களை கருத்தில் கொண்டு, தமிழக அரசு திரும்பப் பெற அறிவுறுத்தி வருகிறோம்.
இந்நிலையில், ஆண்டுக்கு 5 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்துவது, தொழில்துறை நடத்துபவர்களை அதை மூடிவிட்டு வேலைக்குச் சென்றுவிடலாம் என எண்ண வைக்கிறது” எனக் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், “தமிழக அரசு கடந்த 2022ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட மின் கட்டண உயர்வே பாதி தொழில் துறையினரை முடக்கச் செய்த நிலையில், தற்போதைய 4.83 சதவீதம் கட்டண உயர்வு தமிழகத்தின் பல தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரத்தை பறித்து கடும் நெருக்கடியை மின்சார வாரியம் தொழில்துறையினர் மீது திணிக்கின்றனர்.
ஏற்கனவே இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் எந்த ஒரு சலுகைகளும் அளிக்கப்படாத நிலையில், மீண்டும் கட்டணத்தை உயர்த்தி இருப்பது உள்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த சிறு, குறு தொழில்களை முடக்குகின்ற செயல். எனவே, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் செயல்முறைக்கு வந்துள்ள மின்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க:அமலாக்கத்துறை விசாரணைக்கு ஜாபர் சாதிக் சகோதரர் நேரில் ஆஜர்? நடப்பது என்ன?