சென்னை:வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மையமாக (Deep Depression) தமிழ்நாட்டின் வடககு கடலோர மாவட்டங்களில் கனத்த மழையைக் கொடுத்தது. வானிலை ஆய்வு மைய தகவல்களின் படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 50 செ.மீ மழை பெய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் கேதர் பகுதியில் 42 செ.மீ. மழையும், சூரப்பட்டுவில் 38 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. விழுப்புரம் நகரப்பகுதி, முண்டியம்பாக்கம், முகையூர், தருமபுரி மாவட்டம் அரூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதம்பூண்டி, வெங்கூர், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இந்த மழைப்பொழிவு குறித்து குறிப்பிட்டுள்ள தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 500 மில்லி மீட்டர் பழை பதிவாகியுள்ளதைக் குறிப்பிட்டு, இது போன்ற மழைப்பொழிவு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 300 ஆண்டுகளக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் என குறிப்பிட்டுள்ளார். தருமபுரி மாவட்டம் அரூரில் 331 மி.மீ. மழை பதிவாகியுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விழுப்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிடுவதற்காக சென்றுள்ளார். மரக்காணம் ஒன்றியம் மந்தவாய் புதுக்குப்பம் புயல் பாதுகாப்பு மையம், விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், மற்றும் விழுப்புரம் ரெட்டியார் மில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையத்தினையும் முதலமைச்சர் நேரில் பார்வையிடுவார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச மழைப்பொழிவை எதிர்கொண்டிருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சேதங்களை ஆய்வு செய்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே உள்ள பரசனேரி நிரம்பி தண்ணீர் வெளியேறியது. இதில் திருப்பத்தூர் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாடகை வேன்கள் , மினி பேருந்துகள், கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. பள்ளமான கால்வாய் பகுதிகளில் வாகனங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
அதிக அளவு தண்ணீர் செல்வதால் திருப்பத்தூர் செல்லும் சாலை தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளது, அதேபோன்று ஊத்தங்கரையில் இருந்து அரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தெப்பக்குளம் நிரம்பி அதிலிருந்து வெளியேறி நீர் சாலையில் அதிகளவு செல்வதால் இந்த சாலையின் தற்போது மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சரயு மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மழை ஏற்படுத்திய சேதம் (ETV Bharat) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனமழையால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு தகுந்த நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் கிருஷ்ணகிரி விழுப்புரம் தர்மபுரி போன்ற மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம் சாட்டினார். போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய தாலுகாக்களில், விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதாகவும், இதனை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.