திருப்பூர்: தமிழக அரசு மீது பயம் இருந்தால் எவரும் தவறு செய்ய மாட்டார்கள். இது முழுக்க முழுக்க அரசின் தவறு, என பல்லடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலை செய்யப்பட்டவரின் மனைவி அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
பல்லடம் அடுத்த சேமலைக்கவுண்டன் பாளையத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் செந்தில்குமார் மற்றும் அவரது தாய் அலமாத்தாள், தந்தை தெய்வசிகாமணி என 3 பேரை கடந்த நவ, 29 ஆம் தேதி மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க திருப்பூர் போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 10 இன்ஸ்பெக்டர்கள் 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 10 தனிப்படையாக உயர்த்தி ஐஜி செந்தில் குமார் உத்தரவு பிறப்பித்தார். உத்தரவின் பேரில், காவல் துறையினர் மற்றும் உயரதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று (டிச.02) திங்கட்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
அப்போது அமைச்சரை கண்டதும், படுகொலை செய்யப்பட்ட செந்தில்குமாரின் மனைவி கவிதா, "தமிழக அரசு மீது பயம் இருந்தால் எவரும் தவறு செய்ய மாட்டார்கள். இது முழுக்க முழுக்க அரசின் தவறு. விவசாயி, விவசாயி என்று விளம்பரப்படுத்தி கொள்கிறீர்களே தவிர விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை” என அமைச்சரிடம் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பல்லடம் கொலை வழக்கு: சாயல்குடி தம்பதியிடம் நடந்த விசாரணை.. கொலையில் நீளும் மர்மம்!
தொடர்ந்து பேசிய அவர் “ 3 நாட்களாக இந்த குடோனில் குழந்தைகளை வைத்துக்கொண்டு இருந்து வருகிறோம். கொலை செய்பவர்களை பிடித்து நீங்கள் கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு தெரியுதா? கொலை செய்தவர்களை பிடித்தால் தான் எங்களுக்கு ஆறுதல். எனது கணவர் மற்றும் மாமனாருக்கு குடிபழக்கம் எதுவும் கிடையாது. அவர்கள் யாரிடமும் தகராறு செய்ய மாட்டார்கள். அவர்கள் உண்டு வேலை உண்டு என்று இருப்பவர்களை கொலை செய்துள்ளனர்.
பிரச்சனை நடக்கும் சமயத்தில் வருவீங்க, போவீங்க. எனது கணவர் இறந்துவிட்டார், எனக்கு என்ன இழப்பீடு தருவீர்கள்? காவல்துறையினர் மீது யாருக்கும் பயம் கிடையாது. வரும் காலத்தில் விவசாயிகள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும்? காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதற்கு அமைச்சர்,” கொலை செய்தவர்களை தேடும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வாய்க்கால் பகுதி என்பதால் கேமராக்கள் இல்லை. விரைவில் கொலை செய்தவர்களை போலீசார் கைது செய்வார்கள்” என ஆறுதல் தெரிவித்துள்ளார்.