தமிழ்நாடு

tamil nadu

"ராகுல் காந்தியின் பேச்சால் இந்துக்கள் மனம் புண்பட்டுள்ளது" - தமிழிசை செளந்தரராஜன் ஆவேசம் - Tamilisai Soundararajan

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 11:30 AM IST

ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார். இதற்கு எனது கடுமையான கண்டனங்கள் என பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி மற்றும் தமிழிசை சவுந்தரராஜன்
ராகுல் காந்தி மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் (Credits - ETV Bharat Tamil Nadu and Sansad TV)

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய முன்னாள் ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையம் வருகை தந்தார்.

தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,"தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான சூழல் நிலவி இருக்கும். இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்.இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத்திற்கென ஒரு நடைமுறை இருக்கின்றது. ஆனால் ராகுல் காந்தி படத்தை காண்பித்து வருகின்றார். மூன்று அமைச்சர்கள் எழுந்து இதற்கு பதில் சொன்னார்கள். ராகுல் காந்தி எதிர்மறையான கருத்துகளை தவறாக சொல்லிக் கொண்டே இருந்தார். அதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அமைச்சர்கள் இருந்தார்கள். இன்னுயிரை நாட்டிற்காக ஈன்றவர்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் கொடுக்கவில்லை என்று ராகுல் சொன்னார்.

உடனடியாக ராஜ்நாத் சிங் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றார். விவசாயிகளுக்கு பயிர்களுக்கு விலை நிர்ணயம் இல்லை என்று தவறான கருத்தை சொன்னார். அதற்கும் அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டி இருந்தது.நாடாளுமன்றத்தை பார்த்தீர்கள் என்றால் ஏதோ விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டும் என்று ராகுல் பேசுகிறார். தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 எம்பிக்கள் உள்ளனர். ராகுல் காந்தி இந்துக்களின் உணர்வுகள் புண்படும் அளவிற்கு பேசினாலும் 40 எம்பிக்கள் வாயை திறக்காமல் அமர்ந்திருந்தது வேதனை அளிக்க கூடியது.

இவர்களால் தமிழகத்திற்கு எந்த பலனும் இருக்காது. சத்தம் போடுவார்கள் அவ்வளவு தான், ஒரு வேதனையான நிலையை நாடாளுமன்றத்தில் பார்த்து இருக்கின்றோம். இதனை எதிர்கொள்ளத் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் மற்றும் பாரத பிரதமர் தயாராக இருப்பார் என்பது எனது கருத்து" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மதுவிலக்கு பற்றி அவ்வளவு பேசினார்கள். இன்று பத்திரிகையாளர்களை சந்திப்பதை கூட தவிர்த்து பயந்து போய் இருக்கின்றார். அதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் 60க்கும் மேற்பட்ட உயிர் காவு வாங்கப்பட்டு இருக்கின்றது. முதலமைச்சர் துறை சார்ந்த அமைச்சர்கள் அங்கு போய் பார்க்கவில்லை. விசாரணை வேண்டும் என்றால் அவர்கள் பயப்படுகிறார்கள். தமிழக அரசாங்கமும் பயப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு தமிழக எம்பிக்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தான் மன வேதனையாக இருக்கிறது" என்றார்.

அண்ணாமலை வெளிளிநாடு சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார் இது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு? "கட்சி பற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை.அது எல்லாமே அரசியல் ரீதியாக எடுக்கப்படும் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:லண்டன் செல்லும் அண்ணாமலை? அரசியலில் இருந்து 6 மாதம் ஓய்வா?.. மேலிடத்திற்கு பறந்த கடிதம் - பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details