தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யதார்த்த அரசியல் சாலையில் தவெக.. விஜய் கடிதம்! - VIJAY LETTER

அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல் என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2024, 5:02 PM IST

சென்னை: இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில், “மாநாடு நடத்த, பல்வேறு காரணங்களால், நமக்குக் கிடைத்தது மிகக் குறைந்த கால இடைவெளிதான். அதிலும் அடைமழை வேறு குறுக்கிட்டது. இருந்தும், எல்லாவற்றையும் சமாளித்து, சூறாவளியாகச் சுழன்று, நம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை வெற்றிபெறச் செய்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

எப்போதும் விவசாயப் பெருமக்களை வணங்கிப் போற்றும் இயக்கமாக இருக்கும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்கள் கரம் பற்றி நன்றி சொல்லவே எனக்கு விருப்பம். இருந்தும், இப்போது நெஞ்சம் நெகிழ அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், வி.சாலை, விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கும் நன்றி சொல்லத் தோன்றுகிறது. அவர்கள் அனைவருக்கும் நன்றி.

மாநாட்டிற்கான நெறிமுறைகளை செவ்வனே செயல்படுத்திட அனுமதி மற்றும் ஒத்துழைப்பு நல்கிய, சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. கடிதங்கள் வாயிலாக வெளியிட்ட என் வேண்டுகோள்களை ஏற்று, தங்கள் வீடுகளில் இருந்தே வெற்றிக் கொள்கைத் திருவிழாவைக் கண்டு களித்த அனைத்துத் தாய்மார்களுக்கும், முதியோர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.

இதனிடையே, மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். இரவெல்லாம் கண்விழித்து, தூக்கமின்றி, அயற்சியைப் பொருட்படுத்தாமல், மதியம் வரை சுட்டெரித்த வெயிலையும் தாங்கிக்கொண்டீர்கள். சிலர் உடல் உபாதைகளைக்கூட பொறுத்துக்கொண்டு கலந்துகொண்டீர்கள்.

அதேபோல, தமிழக அரசியல் களத்தில் நமக்காக நம் தோளோடு தோள் சேர்ந்து நிற்பதை உறுதி செய்வதுபோல, தங்களின் பேரன்பையும் பேராதரவையும் தெரிவிக்கும் வகையில், நமது மாநாட்டிற்குப் பேரலைகளாக எழுந்து வந்த பொதுமக்களுக்கு நன்றி சொல்ல. வார்த்தைகளைத் தேடித் தேடி, கண்டுபிடிக்க இயலாமல் மவுனமொழி பேசி, கண்கள் கலங்க நிற்கிறேன்.

எதைப் பற்றியும் யோசிக்காமல், இந்த மண்ணைச் சேர்ந்த ஒற்றை மகனுக்காக, இத்தனை லட்சம் மனங்கள் திரண்டு நின்றது என் மனதை நெகிழச் செய்துவிட்டது. உங்களை உறவுகளாகப் பெற்றது என் பாக்கியமன்றி வேறென்ன? நாடே வியக்கும் வகையில் நம் மாநாட்டை மாபெரும் வெற்றிபெறச் செய்த உங்கள் ஒவ்வொருவரின் மனதையும் கோடிப்பூக்களைத் தூவி, போற்றி மனம் நிறைகிறேன்.

உங்கள் ஒவ்வொருவரின் அன்பிலும் மனம் நெகிழ்ந்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் தேங்க, அரசியல் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம். இப்பயணத்தின் இலக்கை, நம் தமிழ்நாட்டு மண் இனிவரும் நாள்களில் பார்க்கும். அது உறுதி. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கண்ட காட்சிகள் எல்லாம், கண்களிலும் மனதிலும் கல்வெட்டுகளாகவே பதிந்துவிட்டன. தமிழக அரசியல் வரலாற்றில், காலாகாலத்திற்கும் அழிக்கவே இயலாத பதிவுகள் அவை.

ஆம். நமது மாநாட்டில், அலைகள் கை தட்டும் ஆர்ப்பரிக்கும் கடலைக் கண்டேன். கதிர்கள் வெடித்துவிழும் ஒளிப்பிழம்புகளைக் கண்டேன். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோடு, தமிழகத்தின் வெற்றிக்கான வெள்ளோட்டத்தையும் கண்டேன். தீர்க்கமான அரசியல் வெற்றிக்கான திசைகள் திறக்கக் கண்டேன்.

உங்களை என் தோழர்களாக, தூய குடும்ப உறவுகளாகப் பெற்றது என் வாழ்நாள் வரம். வழியெங்கும் வசந்தத்தை விதைக்கிற வைரநெஞ்சங்கள் நீங்கள். நம் மக்களோடு சேர்த்து, உங்களையும் உயரத்தில் வைத்து அழகு பார்க்கவே இந்த அரசியல் பயணம். என் எல்லா வார்த்தைகளுக்கும் நீங்கள் உயிர் கொடுத்தீர்கள்.

அதனால்தான், நமது மாநாட்டின் வாயிலாக பொறுப்புணர்வுடன் கூடிய கடமையுடன், கட்டுப்பாடான, கண்ணியமான, ஆரோக்கியமான, உத்வேகமான, உரிமைகளை மீட்டெடுக்கும் அரசியலை இந்த மண்ணிலே விதைத்திருக்கிறோம். மாநாட்டில் நம்மைக் கண்ட நம் தமிழக மக்களும் அதை உணர்ந்திருப்பர்.

நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள், இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்.

அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல். அதைச் சாத்தியப்படுத்துதல் மட்டுமே நம் 'தீவிர அரசியல் செய்தலாக இருக்கும். நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம். தங்கள் மண்ணைச் சேர்ந்த மகன்களான, மகள்களான நம்மைத் தக்க இடம் நோக்கி, தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்துச் செல்வர்.

ஆகவே, அவர்களின் மனதில் நிறையும் அளவிற்கு, அதிக நம்பிக்கையுடனும் நன்றியுடனும் ரெட்டைப் போர் யானைகளின் பலத்துடன் உழைப்போம். வாகைப் பூக்கள் நமக்காகவே நாடெங்கும் பூத்துக் குலுங்கப் போகின்றன. நமது மாநாட்டின் மூலம், வி.சாலை நமது வியூகச் சாலையாகவும், விவேக சாலையாகவும் மற்றும் வெற்றிச் சாலையாகவும் ஆனது போலவே, நம்மை யாராலும் வெல்ல இயலாத வித்தியாசமான, யதார்த்த அரசியல் சாலைக்கும் நம்மை அழைத்துச் செல்லும். எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026-ல் நம் இலக்கை அடைவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details