சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் விஜய், கடந்த பிப்ரவரியில் கட்சி தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரோடு தொடங்கிய அக்கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் என்றும் விஜய் தெரிவித்தார். இதனிடையே, 2024 மக்களவைத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் என எதிலும் யாருக்கும் ஆதரவுமில்லை, போட்டியும் இல்லை எனவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நாளை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, இரு நாட்களுக்கு முன்பு, சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றி ஒத்திகை பார்த்தார் விஜய்.
இந்த நிலையில், இன்று அறிக்கை ஒன்றை விஜய் வெளியிட்டுள்ளார். அதில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.
தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு. கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நடிகர் விஜயின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்? - ஜோதிடர் சுப்பிரமணியன் கூறுவது என்ன?