தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடையில்லா இண்டர்நெட்.. தயாராகும் தவெக மாநாட்டுத் திடல்.. கவனம் ஈர்த்த கட்-அவுட்!

தவெக மாநாட்டுக்கு வருபவர்களுக்கு தடையில்லா இணைய வசதி தர கட்சி தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தவெக மாநாட்டுத் திடல்
தவெக மாநாட்டுத் திடல் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2024, 6:41 AM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு‌ 9 வரை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாடுகளை ஒப்பந்ததாரர்கள் இரவு பகலாக செய்து வருகின்றனர்.

இப்பணிகள் இன்று (அக்.24) மாலைக்குள் நிறைவடையும் என கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று மாநாட்டு திடலின் முகப்பிலிருந்து மாநாட்டு திடல் வரையிலான வழியின் இருபுறமும் 35 அடி உயரத்தில் கொடிக் கம்பம் நடப்பட்டு, அதில் 15 அடி உயரத்தில் 300க்கும் மேற்பட்ட கம்பங்களில் கட்சிக் கொடி பறக்க விடப்பட்டது.

மேலும், “இவ்வாறு நடப்பட்டுள்ள கொடிக் கம்பங்களில், குலையுடன் கூடிய 2,000 வாழை மரங்கள் கட்டப்பட உள்ளது. மேலும், மாநாட்டுக்கு வருபவர்களுக்கு வசதியாக தகவல் மையம் அமைக்கப்பட உள்ளது. கழிவறை, குடிநீர் வசதிகள் செய்யப்பட உள்ளன. மாநாட்டுத் திடல் மற்றும் பார்க்கிங் பகுதியில் அவசர மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

தவெக மாநாடு மேடை (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த உதவி மையத்தில் மருத்துவர்கள், மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸுடன் தயாராக இருப்பர். குழுவினர், கண்காணிப்பு குழுவினர், வரவேற்புக் குழுவினர் என அனைவருக்கும் தனித் தனியாக சீருடை வழங்கப்பட இருக்கிறது. மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் போல செட் அமைக்கப்பட்டு, அதில் 2 யானைகள் முன்னங்கால்களை உயர்த்தி பிளிறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"விஜய் மாநாட்டுக்கு செல்லக்கூடாது என்பதற்காக தமிழக அரசே பேருந்துகளை வாடகைக்கு வாங்குகிறதா?" - தமிழிசை கேள்வி!

அதற்கு மேலாக விஜய் புகைப்பட பேனர் வைக்கப்படும் என கூறப்படுகிறது. மேடையில் ‘வெற்றிக் கொள்கை திருவிழா’ என்ற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தமிழர்களின் பாரம்பரிய நடனங்கள் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

தவெக மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள கட்-அவுட் (Credits - ETV Bharat Tamil Nadu)

மாநாட்டுக்கு வருபவர்கள் மாநாடு தொடர்பான போட்டோ, வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் பகிரும் வகையில் தடையில்லா இன்டர்நெட் வசதியும் செய்யப்பட உள்ளது. மேலும், மாநாட்டுப் பந்தலில் 60 அடி உயரத்தில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் பேனர்களுக்கு நடுவே விஜயின் உருவம் பொறித்த பேனர் இடம் பெற்றுள்ளது.

மேலும், மொழிப்போர் தியாகிகளின் உருவம் பொறித்த பேனர் வைப்பதற்கு காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், அதற்கான ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்படும்” என தவெக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details