சென்னை :தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.சாலையில் நடைபெற இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளும் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
இந்நிலையில், தவெக சார்பில் மாநில மாநாட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் செயல்வடிவக் குழுக்கள் அமைக்கப்படுள்ளன என்று அறிக்கை வெளியாகி உள்ளது. அதன்படி, மாநாடு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க :தமிழக வெற்றிக் கழக மாநில மாநாடு.. வெளியான முக்கிய அப்டேட்!
இதுதவிர பொருளாதாரக் குழு, சட்ட நிபுணர் குழு, வரவேற்புக் குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு, சுகாதாரக் குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு, வாகன நிறுத்தக் குழு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் மட்டும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 200க்கும் அதிகமான நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாநாட்டிற்காக 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் இன்று(அக் 13) நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மாநாட்டிற்கு வருபவர்களை அழைத்து வந்து, அழைத்து செல்லவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களை செய்து கொடுக்கவும், இந்த பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைக்கு இவர்களுக்கு தற்காலிக பொறுப்பு வழங்கப்பட்டிருந்தாலும், அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இவர்களே பொறுப்பாளர்களாக நீடிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்