தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

" தமிழ்த்தாய் வாழ்த்து எப்படி பாட வேண்டும்?".. பள்ளியில் பாடம் எடுத்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ்! - minister kayalvizhi selvaraj - MINISTER KAYALVIZHI SELVARAJ

ரெக்கார்டு செய்யப்பட்ட பாடலை ஒலிபரப்பு செய்யாமல் வாய்மொழியாகவே தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என மாணவர்களுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளிக்குழந்தைகளுடன் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
பள்ளிக்குழந்தைகளுடன் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2024, 8:49 PM IST

கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக வரப்பட்டி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் துவக்கப் பள்ளியில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

முன்னதாக பள்ளிக்கு வருகை தந்த அமைச்சருக்கு, குழந்தைகள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சியின் துவக்கத்தில் பள்ளிக் குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைப் பாட அதனை வியந்து பார்த்த அமைச்சர் கயல்விழி, விழா மேடையில் குழந்தைகளைப் பாராட்டிப் பேசினார்.

அப்போது, "பொது இடங்களில் பதிவு செய்யப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஒலிபரப்பு செய்வார்கள், ஆனால் இங்கு குழந்தைகளே அழகாக மழலை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர், அனைத்து பள்ளிகளிலும் இதே போன்ற நடைமுறை செயல்படுத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேச்சு (Credits - ETV Bharat Tamil Nadu)

மாணவர்கள் செல்போன்கள் தொலைக்காட்சிகளில் நாட்டம் செல்வதை விடுத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்திய அவர் குழந்தைகளிடம் செல்போன்களை கொடுப்பதைப் பெற்றோர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார். சமூகத்தில் பின் தங்கிய மாணவர்கள் படிப்பதற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், கிராமப் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் மற்றும் விடுதிகளை அரசு அமைத்து வருவதாக கூறிய அவர், இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாணவர்கள் வரும் காலங்களில் படித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊராட்சியில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டமானது, தற்போது பேரூராட்சி, நகராட்சி போன்றவற்றில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் 4 கோடியே 39 லட்சம் மதிப்பில், இத்திட்டத்தின் திட்டத்தின் கீழ், சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:"காம்தார் நகருக்கு 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்' என பெயர் சூட்ட வேண்டும்" - எஸ்.பி.பி.சரண் முதலமைச்சர் அலுவலகத்தில் மனு!

ABOUT THE AUTHOR

...view details