தஞ்சாவூர்:கும்பகோணம் சாந்தி நகர் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தஞ்சை வடக்கு மாவட்ட கிளையில் 19வது பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஜாபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது. இதில், அவ்வமைப்பின் பொருளாளர் ஷாகுல், துணைத் தலைவர் சிக்கந்தர் அலி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மேலும், இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொதுச் செயலாளர் அன்சாரி பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுச் செயலாளர் அன்சாரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள சூழலில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்ததும், அவரது ராஜினாமாவை சில மணி நேரங்களிலேயே குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டதும் பாஜகவின் சூழ்ச்சியா என்கிற எண்ணத்தையும், மிகப்பெரிய சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தற்போது நாடு முழுவதும் இவிஎம்(EVM) இயந்திரம் மீது நம்பிக்கை இழந்து, வாக்கு சீட்டு முறை வேண்டும் என்கிற கருத்து மக்கள் மத்தியில் வலுவாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாஜக அரசு, எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து பல ஆயிரம் கோடி மதிப்பிற்கு தேர்தல் பத்திர மோசடியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து நோக்கத்தில் தான் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.