சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இணையதள வசதிக்கான மாதாந்திர சேவைக் கட்டணத்தை செலுத்துவதற்கு, 3 கோடியே 26 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதியை மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை வழங்கி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் இணையதள சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறையால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நிலுவை வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. கட்டணம் செலுத்தாமல் இருந்ததால் இணைப்பை நிறுத்தியதகாவும் தகவல் வெளியானது.
முன்னதாக இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, '' பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எவ்வித நிலுவையும் வைக்கப்படவில்லை, கட்டணம் செலுத்தப்பட்டு விட்டது'' என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தின் மாநிலத் திட்ட இயக்குனர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு 23ந் தேதி அனுப்பி உள்ள கடிதத்தில், '' 6,224 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் இணையதள வசதிக்கான மாதாந்திர சேவைக் கட்டணத்திற்கு 3 கோடியே 73 லட்சத்து 80 ஆயிரம் முதன்மைக் கல்வி அலுவலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மருத்துவக் கழிவுகளை கேரளாவிற்கு அனுப்பும் பணி நிறைவு.. கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!
மேலும், 2,973 உயர்நிலைப் பள்ளிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வீதம் ஆகஸ்ட் மாதத்திற்கும், 3,074 மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் , செப்டம்பர் மாதத்திற்கான கட்டணம் 92 லட்சத்து 22 ஆயிரம் என 1 கோடியே 36 லட்சத்து 81 ஆயிரத்து 500 நிதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 3,088 உயர்நிலைப் பள்ளிகளுக்கு செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையில் தலா 1,500 வீதும் 4 மாதத்திற்கு 1 கோடியே 85 லட்சத்து 28 ஆயிரமும், 3,136 மேல்நிலைப் பள்ளிகளுக்கு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை 3 மாதங்களுக்கு தலா 1,500 வீதம் 1 கோடியே 41 லட்சத்து 12 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு 3 கோடியே 26 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக பாக்கி வைக்கப்பட்டுள்ள கட்டணங்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்'' என்று தெரிவித்துள்ளது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இணையதள சேவைக்கான கட்டணம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு மத்திய, மாநில அரசு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து செலவிடப்படுகிறது. ஆனால், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தற்போது தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.