சென்னை:கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில், மார்ச் 1ஆம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தது. இதில் உணவக பணியாளர்கள் 2 பேர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை விசாரணையைத் தொடந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த எட்டு நாள்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் கஃபே, மார்ச் 9ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மத்திய வேளாண் இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சமிபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி எடுத்து உணவகத்தில் குண்டு வைத்ததாகவும்" கூறியுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் இந்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் ஷோபா கரந்த்லாஜே முன்வைத்துள்ள இந்த கருத்து தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளரும்,, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது 'X' வலைத்தளப் பக்கத்தில், மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் கண்டனம்:"பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தியுள்ள ஒன்றிய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜேவின் பொறுப்பற்ற பேச்சுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசுவதற்கு அவர் என்ஐஏ அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது இந்த குண்டுவெடிப்பு நிகழ்வுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்க வேண்டும்.